போலி கடவுச் சீட்டுக்களைப் பயன்படுத்தி வெளிநாடு சென்ற நால்வரை பொலிஸார் கைது செய்தனர்.

பருத்தித்துறை, திருகோணமலை, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நால்வர் போலி கடவுச் சீட்டுக்களைப் பயன்படுத்தி ஜேர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்குச் சென்றிருந்தனர்.

அவை போலி கடவுச் சீட்டுக்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து நால்வரும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்.

நாடு கடத்தப்பட்ட நால்வரும் நேற்று இலங்கை வந்திறங்கினர். ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த தகவலின் பேரில், குறிப்பிட்ட நால்வரையும் இரகசிய பொலிஸார் கைது செய்து மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்னிறுத்தினர்.

சந்தேக நபர்கள் நால்வரையும் நாளை (30) வரை விளக்கமறியலில் வைக்குமாறும், முழுமையான விசாரணைக்கு உட்படுத்துமாறும் பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தவிட்டது.