இந்தியாவை சுற்றி பார்க்க வந்த சுவிஸ் ஜோடி மீது தாக்குதல் நடத்தியதில் உத்திரபிரதேச சிறுவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுவிட்சர்லாந்து நாட்டின் லஸ்ஸானே நகரைச் சேர்ந்த 24 வயதுடைய குயின்டன் க்ளார்க் என்பவர் தனது காதலி மேரி டிரோஸ் என்பவருடன் இந்தியாவை சுற்றி பார்க்க வந்துள்ளார்.

உலக அதிசயமான தாஜ்மஹாலை சுற்றி பார்த்த இவர்கள் அதன் பின் 40 கி.மீ தூரத்திலுள்ள பதேப்பூர் சிக்ரிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று சென்றுள்ளனர்.

அப்போது சிலர் அவர்களை பின் தொடர்ந்து கேலி செய்து கொண்டே மேரி டிரோஸூடன் செல்பி எடுக்க முயன்றுள்ளனர். இதனை இந்த ஜோடி எதிர்த்ததால் கையில் வைத்திருந்த கட்டையை கொண்டு உள்ளூர் வாசிகள் அவர்கள் இருவரையும் தாக்கியுள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான காதல் ஜோடியை பொலிஸார் அருகிலுள்ள வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.

இதையறிந்த வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உத்திரப்பிரதேஷ் அரசிடம் விளக்கம் கேட்டிருந்தார்.

இதனையடுத்து பொலிஸார்  வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் குறித்த தாக்குதல் சம்பவத்தோடு தொடர்புடைய  5 சிறுவர்களை பொலிஸார்  கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 18 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.