உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள புலன்ந்த்சாகரின் கெட்லாபூர் பான்சோலி என்கிற கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்பில் வசித்து வரும் எட்டு மாத கர்ப்பிணி தண்ணீர் வாளியைத் தெரியாமல் தட்டிவிட்டதற்காக பயங்கரமாகத் தாக்கப்பட்டமையால் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கடந்த வாரம் வழக்கம் போல தனது வேலைகளை செய்து  களைப்படந்த குறித்த பெண்  நடக்கமுடியாமல் எதிர்வீட்டு சுவரைப் பிடித்து நின்றிருக்கிறார். 

அப்போது அவரை அறியாமல் அந்த வீட்டுத் திண்ணையில் வைக்கப்பட்டிருந்த வாளி கைபட்டு கீழே விழுந்துள்ளது.

இதைப் பார்த்துவிட்ட அந்த வீட்டுப் பெண் ' நீ எப்படி என் வீட்டு வாளியில் கைவைக்கலாம்' என்று சொல்லியபடியே குறித்த பெண்ணின்  வயிற்றில் எட்டி உதைத்துள்ளார்.

மேலும் அவரது தலையிலும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

குறித்த தாக்குதல் நடவடிக்கை காரணமாக பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் பொலிஸில் முறைப்பாடு செய்ய சென்ற போது வெளிக்காயங்கள் எதுவும் இல்லாத காரணத்தால் முறைப்பாடை ஏற்றுக் கொள்ள முடியாது என திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில், வைத்தியசாலையில் இருந்து வீட்டிற்கு அழைத்துவரப்பட்ட குறித்த பெண்  கடந்த புதன்கிழமை வலியால் அலறித்துடித்து இருக்கிறார்.

வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே குறித்த பெண் உயிரிழந்துள்ளார். எட்டு மாத கர்ப்பத்தில் இருந்த குழந்தையும் இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.