உடற்பருமன் பிரச்சினையால் பாதிக்கப்படும் 12 வயதிற்குட்பட்ட சிறார்களின் எண்ணிக்கை கவலையளிக்கும் வகையில் அதிகரித்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. உலகளவில் உடற்பருமனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு பில்லியனைத் தொட்டிருக்கிறது. இதில் பெரியவர்களைக் காட்டிலும் சிறார்கள் தான் அதிகளவில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் எதிர்காலத்தில் சர்க்கரை வியாதி, உயர் இரத்த அழுத்தம், இதயம் தொடர்பான பாதிப்பிற்கும் ஆளாகுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதற்கு பெற்றோர்களும் ஒரு காரணம். அவர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு அதிக கொழுப்பு சத்து உள்ள உணவுப் பொருள்கள், சுவைக்காக செயற்கை நிறமிகள் சேர்க்கப்பட்ட துரித வகை உணவுகள், பதப்படுத்தப்பட்டு பக்கற்றுகளில் அடைக்கப்பட்ட உணவுப் பொருள்கள் மற்றும் குளிர்பானங்கள் என அவர்கள் விரும்பி கேட்பதையெல்லாம் கேட்கும் நேரத்தில் வாங்கிக் கொடுக்கிறார்கள். அத்துடன் அந்த பிள்ளைகள் இந்த வகையினதான உணவுகள் ஜீரணமாவதற்கான உடற்பயிற்சியையோ அல்லது உடல் உழைப்பையோ செய்ய வற்புறுத்துவதில்லை. குழந்தைகளும் டிவி, ரிமோட், மொபைல் கேம், இன்டர்நெட் என உடலுழைப்பே தேவைப்படாதவைகளில் நேரங்களை கடத்துகிறார்கள். இதனால் அவர்களின் உடல் எடை அதிகரித்து உடற்பருமன் பிரச்சனைக்கு ஆளாகிறார்கள்.

அதனால் பெற்றோர்களும், ஆசிரியர்களும் தங்களுடைய பிள்ளைகள் ஆரோக்கியமான உணவை, சரியான நேரத்தில் சாப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். அவர்கள் தினமும் ஒரு மணித்தியாலமாவது திறந்த வெளியில் உடற்பயிற்சி அல்லது உடலுழைப்பு சார்ந்த பணிகளை மேற்கொள்ள தூண்டுகோலாக இருக்கவேண்டும். அவர்கள் ஆசைப்படும் உணவுப் பொருள்களை ஒரு எல்லை வகுத்து வழங்கவேண்டும். அவர்களை எப்போதும் உற்சாகமாக வலம் வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். இதனை தற்போது பின்பற்றத் தொடங்கினால் தான் அவர்கள் எதிர்காலத்தில் உடற்பருமன் சார்ந்த பிரச்சனைகளிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.

டொக்டர் பழனியப்பன்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்