மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி உயிரிழந்த விண்வெளி ஆய்வுத் துறை மாணவரின் சாம்பலை, அவரது தந்தை விண்ணில் பரவ விட்ட சம்பவம் நெஞ்சை நெகிழச் செய்துள்ளது.

இங்கிலாந்தின் வில்ட்ஷயரைச் சேர்ந்தவர் ஜேமி ஒட்டாவே (22). விண்வெளி ஆய்வில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த இவர், அது தொடர்பான நான்கு வருட கால தொழில்நுட்பப் பாடத் திட்டத்தை வெற்றிகரமாக முடித்திருந்தார்.

எனினும், கல்லூரியின் கடைசி நாளன்று மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி ஜேமி உயிரிழந்தார்.

விண்வெளிக்குப் போகவேண்டும் எனப் பெரிதும் விரும்பிய ஜேமியின் விருப்பத்தை எவ்வாறேனும் நிறைவேற்ற அவரது குடும்பத்தினர் திட்டமிட்டனர்.

அதன்படி, அமெரிக்காவின் நியூமெக்ஸிகோ என்ற இடத்தில் வைத்து, சிறு விண்கலம் ஒன்றில் ஜேமியின் சாம்பல் வைக்கப்பட்டு, பூமியில் இருந்து நூறு கிலோ மீற்றர்களுக்கு அப்பால் அனுப்பிவைக்கப்பட்டது. இதற்கு, ‘செலஸ்டிஸ்’ என்ற விண்வெளி ஆய்வு நிறுவனம் தொழில்நுட்ப உதவியை வழங்கியிருந்தது.

“விண்வெளிக்குப் போக முன் நீ இறந்துவிட்டால் என்ன செய்வது என்று ஒரு முறை ஜேமியிடம் கேட்டபோது, என் சடலத்தைப் புதைக்காமல் எரித்து, அந்தச் சாம்பலை விண்ணுக்கு அனுப்பிப் பரவ விடுங்கள் என்று கூறியிருந்தான். அது அப்படியே நடக்கும் என்று நாங்கள் கொஞ்சமும் நினைக்கவில்லை” என்று கலங்குகிறார் ஜேமியின் தந்தை ஜோன்!