நீண்ட காலமாக ஜப்பான் பொலிஸாரின் கண்களில் விரலை விட்டு ஆட்டிவந்த நிஞ்சா திருடனைக் கைது செய்த பொலிஸார், அவர் ஒரு 74 வயது முதியவர் என்பதையறிந்து அதிர்ச்சியடைந்தனர்.

ஜப்பானில் கடந்த எட்டு வருடங்களாக ஒருவர் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். நிஞ்சா பாணியில் உடையணிந்திருந்த அவர், நிஞ்சா வீரர் போலவே சுவர்களில் ஓடியும், தாவியும் பொலிசாரிடம் சிக்காமல் தப்பிச் சென்றுவிடுவார். அவரைப் பிடிக்க முடியாமல் ஜப்பானிய பொலிஸார் திணறிவந்தனர். 

ஒரு முறை கண்காணிப்பு கெமரா ஒன்றில் நிஞ்சா திருடனின் முகம் பதிவானது. அதை வைத்து குறித்த திருடனை கைது செய்ய முயன்ற பொலிஸார், அத்திருடன் 74 வயது முதியவராக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர்.

பாழடைந்த கட்டடம் ஒன்றுக்குள் போய், இரவு வரை காத்திருந்து நிஞ்சா வீரர் போல உடை மாற்றிக்கொண்டு கட்டடங்களில் கன்னம் வைத்திருக்கிறார் இந்த முதியவர். இதுவரை சுமார் இரண்டரை இலட்சம் டொலர் பெறுமதியான பணம் மற்றும் பொருட்களை இவர் திருடிச் சென்றிருக்கிறார்.

அவர் பற்றித் தெரிவித்த பொலிஸார், “சுவர்களில் அதிவேகமாக ஓடியும், தாவியும் தப்பிச் செல்லும் திருடன் ஒரு முதியவர் என்பது எமக்குப் பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

“நான் மட்டும் இளைஞனாக இருந்திருந்தால் பொலிசார் என்னைப் பிடித்திருக்கவே முடியாது. எனக்கும் வயதாகிவிட்டபடியால், இனிமேல் திருட்டுத் தொழிலில் ஈடுபடப் போவதில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.