நியூயோர்க் நகரில் உள்ள சிட்டி வங்கியின் தலைமையக கணினி கட்டமைப்புக்குள் ஊடுருவி, தாய்வானின் ஈஸ்டன் இன்டர்நெஷனல் வங்கியின் பணத்தை கொள்ளையிட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ள லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் முன் னாள் தலைவர் சலில முனசிங்க, முன்னாள் இராணுவ அதிகாரியின் மகன் சமிந்த நம்முனி மற்றும் அவ்விருவரின் உறவுக்காரர்கள் இருவர் ஆகியோரின் விளக்கமறியல் காலமானது எதிர்வரும் நவம்பர் 6 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான வழக்கு நேற்று கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு வந்த போதே நீதிவான் இவ்வாறு விளக்கமறியலை நீடித்து உத்தரவிட்டார்.
இந்த வழக்கானது விசாரணைக்கு வந்த போது மன்றில் ஆஜரான குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணை அதிகாரிகள், சந்தேக நபர்களின் வங்கிக்கணக்குகள் தொடர்ந்தும் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், இதனுடன் தொடர்புடைய ஏனையோரை அடையாளம் காண கணினி சான்றுகளை ஆய்வு செய்துவருவதாகவும் குறிப்பிட்டனர். இதனையடுத்தே அவர்களின் விளக்கமறியல் காலத்தை நீடிக்க நீதிவான் உத்தரவிட்டார்.
இதுவரை குற்றப் புலனாய்வுப் பிரிவு முன்னெடுத்துள்ள விசாரணைகளில், நியுயோர்க் நகரில் உள்ள சிட்டி வங்கியின் தலைமையக கணினி கட்டமைப்புக்குள் சட்டவிரோதமாக ஊடுருவி, தாய்வானின் ஈஷ்டன் இன்டர்னெஷனல் வங்கியின் கணக்கில் இருந்து மோசடிஒயான முறையில் கொள்ளையிடப்பட்ட மொத்த பணப் பெறுமதி 69.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என கண்டறியப்பட்டுள்ளதாக விசாரணையாளர்கள் நீதிமன்றுக்கு தெரியப்படுத்தினர்.
எனினும் அதில் ஒரு சிரு பகுதியே இலங்கை வங்கியின் நியுயோர்க் கிளை ஊடாக இலங்கைக்கு பறிமாற்றப்பட்டுள்ளதாகவும், மற்றைய பணத் தொகை எந்த நாட்டுக்கு எவ்வாறு கடத்தப்பட்டது என்பது குறித்து துல்லியமாக அறிய கணினி ஆதாரங்களை மையப்படுத்தி விசாரித்து வருவதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணை அதிகாரிகள் கோட்டை நீதிவானுக்கு அறிவித்தனர்.