இலங்கைக்கு எதிரான 5 ஆவது போட்டியில் 9 விக்கெட்டுகளால் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 5-0 என கைப்பற்றி வெள்ளயைடிப்புச் செய்தது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இரு அணிகளுக்குமிடையிலான 3 வகையான கிரிக்கெட் தொடர்கள் இடம்பெற்று வருகின்றன. 

அதில் இலங்கை அணி 2-0 என பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று வெள்ளையடிப்புச் செய்திருந்த நிலையில், பாகிஸ்தான் அணி இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை 5-0 என கைப்பற்றி வெள்ளையடிப்புச் செய்து பழிதீர்த்துள்ளது.

இன்றைய தோல்வி இலங்கை அணிக்கு 12 ஆவது தொடர் தோல்வியென்பதுடன் இந்தவருடத்தில் கடந்த ஜூலை மாதம் முதல் இன்றுவரை இலங்கை அணி பங்குபற்றி விளையாடிய 3 ஒருநாள் தொடர்கள் வெள்ளையடிப்புச் செய்யப்பட்டுள்ளன. 

தென்னாபிரிக்கா , இந்திய அணிகள் ஆரம்பத்தில் இலங்கைக்கு எதிரான தொடர்களை வெள்ளையடிப்புச் செய்திருந்த நிலையில், இன்றைய வெற்றியுடன் பாகிஸ்தான் அணியும் இலங்கைக்கு எதிரான தொடரை வெள்ளையடிப்புச் செய்துள்ளது.

இதேவேளை, கடந்த 2008 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பாகிஸ்தான் அணி தனக்கு எதிராக விளையாடிய அணியை 5-0 என வெள்ளையடிப்புச் செய்துள்ளது.

2017 ஆம் ஆண்டில் 26 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி 4 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளதுடன் 21 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இதில் ஒரு போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்துள்ளது.

இன்றைய போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை அணியின் விக்கெட்டுகளை பாகிஸ்தானிய பந்துவீச்சாளர் பதம் பார்த்தனர். 

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாது தட்டுத்தடுமாறிய இலங்கை அணி வீரர்கள் 103 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தனர்.

ஒரு ஓட்டத்தை பெற்றிருந்த வேளை இலங்கை அணியின் 2 விக்கெட்டுகள் சரிக்கப்பட்டன. ஒருகட்டத்தில் 20 ஓட்டங்களைப்பெற்ற வேளை 5 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி தடுமாறியது.

இலங்கை அணி சார்பில் திஸர பெரேரா மாத்திரம் 25 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பாகிஸ்தான் அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய உஷ்மான் கான் 37 ஓட்டங்களைக்கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு 104 ஓட்டங்களைப்பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்து 9 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரை 5-0 எனக் கைப்பற்றி வெள்ளையடிப்புச் செய்தது.

பாகிஸ்தான் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் இமாம் உல் ஹக் ஆட்டமிழக்காது 45 ஓட்டங்களையும் பர்ஹான் சமன் 47 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இப் போட்டியின் ஆட்டநாயகனாக பாகிஸ்தான் அணியின் உஷ்மன் கானும் தொடர் ஆட்டநாயகனாக பாகிஸ்தான் அணியின் ஹசன் அலியும் தெரிவுசெய்யப்பட்டனர்.