அமெரிக்கா கலிபோர்னியா மாநிலத்திலுள்ள சான் ஜோஸ் நகரைச் சேர்ந்த ஆம்பர் மரியந்தாளின் பூனை  பாடசாலை சென்று படித்து வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு பூபா என்ற பூனையைத் தத்தெடுத்துள்ளார். அவரது மகன்கள் மேத்யூ, மார்க் ஆகியோர் அந்த பகுதியிலுள்ள லேலேண்ட் உயர்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார்கள்.

குறித்த இருவரும் கால்நடையாகப் பாடசாலை செல்வது வழக்கம். இந்நிலையில் பூபாவும் வீட்டில் இருக்காமல் தினமும் இவர்களுடன் பாடசாலைக்குச் செல்வதைப் பழக்கப்படுத்திக்கொண்டது. அத்துடன் வகுப்பறையில் அமர்ந்து பாடத்தையும் கவனிக்கிறதாம்.

ஆரம்பத்தில் உரிமையாளரின் மகன்களுடன் பாடசாலைக்குச் சென்ற பூபா, தற்போது பள்ளி திறக்கும் முன்பு முதல் ஆளாக அங்கு சென்று வாசலில் காத்துக்கொண்டிருக்கிறதாம். இது தொடர்கதையாகி விட்டதால் பள்ளி நிர்வாகத்தினரும் பூபாவை விரட்டுவது இல்லையாம்.

மேத்யூ மற்றும் மார்க்குடன் நட்பு பாராட்டும் பூபா மற்ற மாணவர்களிடமும் விளையாடி மகிழ்கிறது. இதனால் பள்ளி வளாகத்தில் பூபாவிற்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறதாம்.சமீபத்தில் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அடையாள அட்டைக்காக புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அப்போது பள்ளி வளாகத்தில் சுற்றிக்கொண்டிருந்த பூபாவுக்கே முதலில் அடையாள அட்டையை வழங்கி உள்ளனர்.

கடந்த வருடத்திற்கான சிறந்த மாணவன் விருதும் பூபாவிற்குத் தான் வழங்கப்பட்டதாம்.

ஆம்பர் வளர்க்கும் பூபா  பாடசாலைக்கு செல்வது மற்றும் மாணவர்களுடன் பழகுவது என்பன  அப் பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பூபாவிற்கு  ‘Bubba the Cat”’ எனும் பெயரில் பேஸ்புக் கணக்கொன்றும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.