அமெரிக்காவின் ஒரிகான் பகுதியில்  வசித்து வரும்  29 வயதுடைய எலிசபெத் ஆண்டர்சன் இரண்டு குழந்தைகளின் தாயாவார் இவர் ‘ஹைப்பர் லேக்டேஷன்’ என்ற குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கிறார். வழக்கமாக ஒரு தாய்க்குச் சுரக்கும் பாலைவிட 10 மடங்கு அதிகமான பால் இவருக்குச் சுரக்கிறது.

இந்த தாய்க்கு ஒரு நாளைக்கு 6.4 லிட்டர் பால் சுரக்கிறது..! இது ஒரு வகை குறைபாடு என்றாலும், எலிசபெத் அதை பற்றி கவலைப்படவில்லை. தன்னிடம் சுரக்கும் தாய்ப்பாலை பத்திரப்படுத்தி, தேவைப்படுபவர்களுக்குத் தானமாக வழங்கிவருகிறார். இதுவரை 2,271 லிட்டர் பாலை தானம் கொடுத்திருக்கிறார்.

ஒருநாளில் 10 மணிநேரத்தை இதற்காக செலவிடுகிறார். பாலை சுரந்து சேகரிக்க 5 மணிநேரம், அதை குளிர்சாதனப்பெட்டிகளில் பதப்படுத்த 5 மணிநேரம் என பிசியாக இருக்கிறார்.

இது குறித்து  எலிசபெத்  கருத்து தெரிவிக்கையில்,

“என் முதல் மகள் பிறந்தபோது தாய்ப்பாலே சுரக்கவில்லை, குழந்தைக்கு பால் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டேன், இரண்டாவது குழந்தை பிறந்தபோது எதிர்பாராத விதமாகப் பால் அதிகம் சுரக்கும் நிலை உருவாகிவிட்டது. என் குழந்தையால் குடிக்கவே முடியாது, அவ்வளவு வேகமாகப் பால் வெளியேறும். அப்போதுதான் தாய்ப்பாலைத் தானம் செய்ய முடிவெடுத்தேன்.

இரண்டு குழந்தைகளைக் கவனித்துக்கொண்டு வீட்டு வேலை களையும் செய்துகொண்டு பாலுக்காக 10 மணி நேரம் செலவிடுவது எளிதான விஷயம் இல்லை. ஆனால் முதல் குழந்தைக்குப் பால் இல்லாமல் நான் பட்ட கஷ்டத்தை வேறு எந்த தாயும் அனுபவிக்கக்கூடாது என்ற எண்ணத்தில் இந்த வேலையில் மூழ்கியிருக்கிறேன். 

தினமும் 5 வேளை பாலை சுரந்து, பதப்படுத்தி, பாக்கெட்களில் அடைத்து, குளிர் சாதனப் பெட்டியில் வைத்துவிடுவேன். இந்தப் பகுதியில் இருக்கும் இளம் தாய்மார்கள் மார்பகப் புற்றுநோயால் மார்பகங்களை இழந்தவர்கள், எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்கள், ஊட்டச்சத்துக் குறைபாடு உடையவர்கள் என்று தாய்ப்பால் தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறேன். இந்தப் பகுதியின் தேவைக்கு போக எஞ்சியிருக்கும் பாலை கலிபோர்னியா தாய்ப்பால் வங்கிக்குக் கொடுத்து விடுகிறேன்.

பாலை மணிக்கணக்கில் எடுக்கும்போது மார்பகம் பயங்கரமாக வலிக்கும். ஆனாலும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் என் பாலைக் குடித்து ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது வலி மறைந்துவிடும். தாய்ப்பால் என்பது தங்கம் போன்றது. இதை எந்தக் காரணத்துக்காகவும் வீணாக்க முடியாது, வீணாக்கவும் கூடாது” என்கிறார் எலிசபெத்