சொந்த மண்ணில் நடைபெற்ற போட்டியில் நேர் செட்டில் தோற்று இரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார் மரியா ஷெரபோவா.

ஐந்து முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற மரியா ஷரபோவா, ஊக்க மருந்து விவகாரத்தில் சிக்கி போட்டிகளில் ஆடத் தடை செய்யப்பட்டார். 

சுமார் ஒன்றரை ஆண்டுகாலப் போராட்டத்தின் பின் மீண்டும் டென்னிஸ் அரங்கில் மீள் பிரவேசம் செய்த அவர், தான் இன்னமும் ஒரு வெற்றி வீராங்கனைதான் என்று நிரூபித்தார். 

நீண்ட இடைவேளைக்குப் பின் டென்னிஸ் களமிறங்கிய ஷரபோவா, ‘தியான்ஜின் ஓப்பன்’ தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிக் கிண்ணத்தைச் சுவீகரித்தார். ஆனால், இந்த மகிழ்ச்சி இரண்டு நாட்கள் கூட நீடிக்கவில்லை.

ஷரபோவாவின் சொந்த மண்ணான ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் நேற்று (21) ஆரம்பமான ‘கிரெம்ளின்’ கிண்ணத்துக்கான முதலாவது சுற்றில், உலக டென்னிஸ் தர வரிசையில் எட்டாவது இடத்தில் உள்ள மகதலேனா ரிபாரிகோவாவிடம் நேர் செட் கணக்கில் தோற்றார்.

சுமார் இரண்டு மணிநேரம் நீடித்த இந்தப் போட்டியில், 7க்கு 6 மற்றும் 6க்கு 4 என்ற கணக்கில் மண்ணைக் கவ்வினார் ஷரபோவா!

“உடல் ரீதியாக நான் பலத்துடன் இருந்தாலும், அது போதாது என்பதை இந்தத் தோல்வி எனக்குப் புரியவைத்திருக்கிறது. மறுபுறம், மகதலேனாவின் ஆட்டமும் மிகச் சிறப்பாக இருந்தது. ஒவ்வொரு பந்துக்குமாக அவர் சளைக்காமல் ஓடியது ஆச்சரியமாக இருந்தது” என்று கூறியுள்ளார் ஷரபோவா!