மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தில் சாட்சிகளாக இருபது பேரின் பெயர்கள் அடங்கிய பட்டியலை, ஜனாதிபதி ஆணைக்குழுவில் சட்ட மா அதிபர் அளித்துள்ளார். அந்தப் பட்டியலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பெயரும் அடக்கம்.

பிணைமுறி முறைகேடுகள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை பொதுமக்களிடம் சாட்சியங்கள் பெறப்பட்டுவிட்டன. 

எனினும், ஆணைக்குழுவின் முன்வைக்கப்பட்ட சில கூற்றுக்கள் மற்றும் சர்ச்சைகளையடுத்தே இருபது பேரின் பெயர்கள் அடங்கிய பட்டியலை சட்ட மா அதிபர் சமர்ப்பித்துள்ளார்.

முன்னதாக, சில கேள்விகள் அடங்கிய கேள்விப் பட்டியல் ஒன்றை ஜனாதிபதி ஆணைக்குழு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பி வைத்திருந்தது. அதற்கான பதில்கள் நேற்று முன்தினம் (20) ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டன.

இந்நிலையில், பிணைமுறி குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் கால எல்லை எதிர்வரும் 27ஆம் திகதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, ஆணைக்குழுவின் ஆயுளை நீட்டிக்க அனுமதி வழங்குமாறு ஆணைக்குழு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. 

இக்கோரிக்கை தொடர்பில் நாளை ஜனாதிபதியுடன் பரிசீலிக்கப்பட்ட பின் முடிவு அறிவிக்கப்படும் என ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் ஃபெர்னாண்டோ தெரிவித்தார். ஏற்கனவே இரண்டு முறை ஆணைக்குழுவின் காலம் நீட்டிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.