திக்வெல்லையில், விண்கல் துகள் எனக் கருதப்படும் ஒரு சிறு கல் துண்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

மாத்தறை கடற்பகுதியில் கடந்த புதனன்று விண்கல் என்று சந்தேகிக்கப்படும் ஒரு பொருள் விழுந்து வெடித்தது. 

இந்நிலையில், மாத்தறை மாவட்டம், திக்வெல்லையின் வீடொன்றின் கூரையில் கல் துண்டு ஒன்று இருக்கக் கண்ட வீட்டு உரிமையாளர், அது குறித்து பொலிஸாருக்குத் தகவல் கொடுத்தார்.

“கல் துண்டு ஒன்று வீட்டுக் கூரையில் விழுந்து உருளும் சத்தம் கேட்டது. அது பற்றி நாங்கள் ஒன்றும் பெரிதாக நினைக்கவில்லை. மறுநாள் காலையில் கூரையில் ஏறிப் பார்த்தபோது, எரிந்து போன கல் துண்டு ஒன்று விழுந்திருந்ததைக் கண்டேன். இதையடுத்தே பொலிஸாருக்குத் தகவல் அளித்தேன்” என வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.

இது பற்றி ஆராய்ந்த பொலிஸார், ஆர்தர் சி.கிளார்க் நிலையத்துக்கும் சுரங்கத் துறையினருக்கும் தகவல் அனுப்பியுள்ளனர்.

தற்போது அந்தக் கற்றுண்டு பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருக்கிறது.