சுதந்திர தின விழாவில் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் பாடுவது தொடர்பில், ஜனநாயக இடதுசாரி முன்னணி தலைவர் வாசுதேவ நாணயக்கார எம்பி, தனது ஒன்றிணைந்த எதிர்க்கட்சி மகிந்த அணி கூட்டாளியும், பிவிதுரு ஹெலஉறுமய கட்சியின் தலைவருமான உதய கம்மன்பில எம்பிக்கு எடுத்துக்கூறி, தொட்டதற்கெல்லாம் இனவாதம் பேசி, நாட்டை மீண்டும் இனத்துவேஷ குட்டையில் ஆழ்த்த முயல வேண்டாம் என புத்திமதி கூறி அவரை திருத்த முயல வேண்டும்.

பாராளுமன்றத்தில் கடந்த வாரம் நடைபெற்ற “இலங்கையர் அடையாளம்” என்ற அமைச்சரவை உப குழுவில் விசேட விருந்தினர்களாக, எனது அழைப்பின் பேரில், வாசுதேவ நாணயக்கார எம்பியும், கூட்டமைப்பு எம்பி சுமந்திரனும் கலந்துக்கொண்டார்கள். இந்த குழு கூட்டத்தின்போது, சுதந்திர தின விழாவில் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் பாடவேண்டும் என்ற யோசனையை நாம் அனைவரும் ஏகமனதாக நிறைவேற்றியதை வாசுதேவ மறந்திருக்க மாட்டார் என நான் நம்புகிறேன் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

சுதந்திர தின விழாவில் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவதை எதிர்த்து பிவிதுரு ஹெலஉறுமய தலைவர் உதய கம்மன்பில எம்பி கூறிவருவது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

கடந்த 27ம் திகதி  முதலாம் இலக்க குழு அறையில் “இலங்கையர் அடையாளம்” அமைச்சரவை குழுக்கூட்டம் நடைபெற்றது. எனது அமைச்சின் செயலாளர், இந்தக்குழுவின் செயலாளராகவும் பணியாற்றுவதுடன்,  இக்குழுவில் எனது அமைச்சு பிரதான அங்கம் வகிக்கின்றது.  எனவே “நாம் இலங்கையர்” என்ற போது அடையாளம் ஏற்பட வேண்டுமென்றால், அனைத்து தரப்பினரும் கலந்து பேச வேண்டும் என்ற அடிப்படையில், அமைச்சரவைக்கு வெளியே இருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பி சுமந்திரனையும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு எம்பி வாசுதேவ நாணயக்காரவையும் விசேடமாக அழைத்திருந்தேன். ஏற்கனவே இந்தக்குழுவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்கள் சரத் அமுனுகம, ராஜித சேனாரத்ன, ரவுப் ஹக்கீம், கருணாரத்ன பரணவிதான ஆகியோரும் அம்கம் வகிக்கின்றனர். 27ம் திகதி கூட்டத்தில் பிரதமர் கலந்துக்கொள்ளவில்லை.  கலந்துக்கொண்ட எம்பீக்கள் வாசுதேவ, சுமந்திரன் உட்பட அனைவரும் எதிர்வரும் 4ம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவில் சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தீர்மானம் நிறைவேற்றினோம். 

தனித்தனி இன அடையாளங்களுக்கு அப்பால், நாம் அனைவரும் இலங்கையர் அடையாளத்தை பெற வேண்டும் என்றால் அதை, தமிழ் மொழியிலும் இலங்கை தேசிய கீதத்தை பாடுவதில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும் என நான் எடுத்து கூறினேன். கடந்த சுதந்திர தின விழாவில் தானும், சம்பந்தன் எம்பியும் முதன்முதலாக கலந்துக்கொண்டோம். இந்த முறையும் கலந்துகொள்ள உள்ளோம். எமக்கு  தமிழ் மொழியிலும் தேசிய கீதம் பாடப்படுவது கட்டாயமானது என சுமந்திரன் எம்பி மிகத்தெளிவாக எடுத்து கூறினார். வாசுதேவ நாணயக்கார எம்பியும்,  ராஜித சேனாரத்னவுடன் சேர்ந்து இதை நிலைபாட்டை ஆதரித்து பேசினார். இதன்பிறகே தீர்மானம் எடுக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று இது தொடர்பில் ஒரு இனவாத சர்ச்சை நிலைமையை ஏற்படுத்த  உதய கம்மன்பிலவும் அவரது, ஏனைய கூட்டாளிகளும் முயல்கின்றனர். சில ஊடகங்களும் இதற்கு துணை போகின்றன. எமது அமைச்சரவை குழுவின் கோரிக்கையை ஏற்று, இது தொடர்பில் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு இன்னமும் எடுக்கப்படவில்லை என்பதை நானறிவேன். ஒருவேளை தமிழில் தேசிய கீதம் பாடப்படாவிட்டால், தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன நிலைப்பாட்டை எடுக்கும் என எனக்கு தெரியாது. தமிழ் முற்போக்கு கூட்டணி, தேசிய சுதந்திர விழாவில் கலந்துக்கொள்ளும். ஆனால், அங்கு சிங்கள கீதத்தின் பின் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் பாடப்படாவிட்டால், சுதந்திர தின விழா முடிவடைந்த பின்னர் நாம் மன வேதனையுடேனேயே வீடு செல்வோம்.      

தமிழ் மொழியிலான தேசிய கீதம், ஆனந்த சமரகோன் இயற்றிய சிங்கள மொழி கீதத்தின் மொழி பெயர்ப்பு ஆகும். இதை செய்தவர் புலவர் நல்லதம்பி ஆகும். அதே இசை, அதே மெட்டு. இந்த கீதம் தமிழ் ஈழத்தை சிலாகித்து பாடப்படுவது இல்லை. இலங்கையை வாழ்த்தி பாடப்படுகிறது. இந்நிலையில் இதை ஒரு முடிவற்ற சர்ச்சை நிலைமைக்கு கொண்டு வந்திருப்பதே தவறாகும். இதைக்கூட செய்ய முடியாவிட்டால், இந்த நாட்டிலே எங்கனம் சமத்துவ சகவாழ்வை கட்டி எழுப்ப முடியும்?