முன்னாள் பட்டதாரிகளை மீள்-இணைப்பதனூடாக கூட்டுநலன்களைப் பெற்றுக்கொள்ளும் இலக்குடன் பாகிஸ்தானிய முன்னாள் பட்டதாரிகள் சங்கம் நேற்று கொழும்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 

பாகிஸ்தானிய வெளியுறவு செயலாளர் தெஹ்மீனா ஜான்ஜிவா இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு முன்னாள் பட்டதாரிகளின் சங்கத்தினை ஆரம்பித்து வைத்தார். 

இந்நிகழ்வில் அமைச்சர்கள், பிரமுகர்கள்,பாதுகாப்பு பிரிவின் பிரதிநிதிகள்,கல்வித்துறை பிரதிநிதிகள் மற்றும் வெவ்வேறு துறைசார் நபர்களும் கலந்துக்கொண்டனர்.

 

பல்வேறுபட்ட கல்விப் புலமைப்பரிசில்களுடாக இருநாட்டினதும் பல்கலைக்கழகங்களை இணைப்பது இச்சங்கத்தின் நோக்கமாகும். முன்னாள் பட்டதாரிகள் சங்கத்தினூடாக அரச, தனியார் அதேபோல சிவில் சமூகங்கள் இரு நாடுகளினதும் மேம்பட்ட அறிவின் வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்யக்கூடிய நிபுணர்களை உருவாக்குதல் மற்றும் வலையமைப்புக்களை விஸ்தரித்தலினை மேற்கொள்ள வழிவகுக்கும்.

 

பாகிஸ்தான் உயர் கல்வித்துறையில் குறிப்பாக சமூக விஞ்ஞானம், முகாமைத்துவம், பொறியியல், மருந்தகம், பல்மருத்துவம் போன்ற துறைகளில் சிறந்து விளங்குவதாக பாகிஸ்தானிய வெளியுறவு செயலாளர் இந்நிகழ்விலே உரையாற்றுகையில்  குறிப்பிட்டார். 

கடந்த பல தசாப்தங்களாக ஆயிரக்கணக்கான இலங்கை மாணவர்கள் மற்றும் நிபுணர்கள் பாகிஸ்தானில் கல்வி மற்றும் பயிற்சியினைப் பெற்று நன்மையடைந்துள்ளனர் எனவும் அவர் கூறினார்.

 

பாகிஸ்தானிய பிரதமர்  கடந்த வருடம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டபோது, இலங்கையின் சிவில், இராணுவம் மற்றும் மாணவர்களுக்கு  புலமைப்பரிசில்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பயிற்சி நிறுவனங்களினூடாக கல்வித்துறையினை  அபிவிருத்தி செய்வதற்கு வழங்கிய வாய்ப்பினை இதன்போது பாகிஸ்தானிய வெளியுறவு செயலாளர் நினைவூட்டினார்.  

 

“பிரதமரின் பாக்-லங்கா அறிவு நீள்பாதை” எனப்பெயரிடப்பட்ட  இம்முயற்சி பாகிஸ்தானிய உயர் கல்வி நிறுவனங்களில் கல்விகற்பதற்கு இலங்கை குடிமக்களுக்கு அதிகபடியான வாய்ப்புக்களை புலமைப்பரிசில்களுடாக வழங்குகின்றது எனவும் வெளியுறவு செயலாளர் தனது உரையில் குறிப்பிட்டார்.

 

பாகிஸ்தானிய முன்னாள் பட்டதாரிகள் சங்கமானது பன்முக சமூகத்தின் நலன்களுக்காக பயிற்சி மற்றும் கற்றலின்பொழுது பெறப்பட்ட அனுபவங்கள் மற்றும் நினைவுகளை கற்றுக்கொள்ளல், ஒருங்கிணைத்தல், மற்றும் பகிர்ந்து கொள்தலில் அங்கத்துவர்களை ஈடுபடுத்தும் என இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி. ஷாஹித் அஹ்மத் ஹஷ்மத் குறிப்பிட்டார்.

 

 

இவ்வாறு புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இச்சங்கத்தின் அலுவல் பொறுப்பாளர்களுக்கு  தனது பாராட்டுக்களையும், இம்முயற்சி எதிர்காலத்தில் பெரு வெற்றிபெறுவதற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார். இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதி உயர்ஸ்தானிகர் இச்சங்கத்தின் வாய்ப்புக்கள், பணி, நோக்கு மற்றும்  இடைக்கால நிர்வாகக்குழு தொடர்பாகவும் இதன்போது விளக்கினார்.

  

பாகிஸ்தானில் நிபுணத்துவம்பெற்ற, குறுகிய அல்லது நீண்டகால பயிற்சி நெறிகளை முடித்த அனைத்து இலங்கையர்களும் இச்சங்கத்தில் இணைந்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.