சீனாவில் ஒரு கோப்பை தேநீருக்காக ஆயிரக்கணக்கான மக்கள் 5 மணி நேரம் கூட வரிசையில் காத்திருக்கிறார்கள். சாதாரண ஐஸ் டீயின் மீது சீஸைச் சேர்த்துக் கொடுத்தால் அது ‘ஹே டீ’. சீனா முழுவதுமே ஹே டீ சுவையில் மக்கள் மயங்கிக் கிடக்கிறார்கள்.

தேநீர் பற்றிய அடிப்படை விஷயங்கள் கூடத் தெரியாத 21 வயது இளைஞர்தான் இந்த சீஸ் டீயை உருவாக்கியவர். சில மாதங்களுக்கு முன்பு வரை ஜியாங்மென் பகுதியிலுள்ள சிறிய தெருவில் ஓர் ஆள் நிற்கும் அளவுக்கான கடையில்தான் இந்த சீஸ் டீ விற்பனை நடந்து கொண்டிருந்தது.

இன்று குவாங்டோங் மாகாணத்தில் மட்டுமே 50 கிளைகள் இருக்கின்றன. ஒவ்வொரு கடையிலும் குறைந்தது 2 மணி நேரம் ஒரு கோப்பை தேநீருக்காக மக்கள் காத்திருக்கிறார்கள். ஒரு சில இடங்களில் 5 மணி நேரம் கூட பொறுமையுடன் காத்திருந்து தேநீரைப் பருகுகிறார்கள்.