(எம்.எப்.எம்.பஸீர்)

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் முன்னெடுத்திருந்த முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஷ இன்று காலை நாடு திரும்பினார்.

 

இந் நிலையில் அவர் இன்று கட்டுநாயக்கவில் வைத்து கைது செய்யப்படுவார் என பரவலாக தகவல்கள் அரசியல் வட்டரங்களில் இருந்து பரவிய போதும், எந்த சிக்கலும் இன்றி அவர் வீடு திரும்பினார்.

 கோத்தாபய கைது செய்யப்படவுள்ளதாக இன்று பரவிய வதந்தியால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. ஊடகவியலாளர்கள் பலரும் விமான நிலையத்தை நோக்கி படையெடுத்தனர். கோத்தபாய ராஜபக்ஷ எந்த சிக்கலும் இன்றி விமான நிலையத்தில் இருந்து வெளியேறிச் சென்றுள்ளதாக அறிய முடிகின்றது.

டி.ஏ. ராஜபக்ஷ மன்ற நிர்மாணத்தின் போது அரச  பணம் மோசடி தொடர்பில் கோத்தபாய கைது செய்யப்படப்போவதாக பரவலாக அரசியல் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகின.

இந் நிலையில் இது தொடர்பில் வீரகேசரி இணையத்தளம் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகரவிடம் வினவியபோது,

இன்று காலை கோத்தாபய கைது செய்யப்படப் போவதாக தகவல்கள் பரவலாக பரவிய போதும், அவ்வாறு எந்த கைது நடவடிக்கைகளுக்கும் பொலிஸார் தயாராக இருக்கவில்லை என தெரிவித்தார். 

அத்துடன் விமான நிலையத்தில் வைத்து கோத்தாபய தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டதாக தகவல்கள் பரவியுள்ளதாகவும் அவ்வாறு  எந்த விசாரணைகளும் இடம்பெறவில்லையெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.