சென்னையில் இயங்கி வரும் பிரபல தனியார் மருத்துவமனையில், ஒரு குழந்தை பிறந்து நான்கு நாட்களே ஆன நிலையில், அக்குழந்தையின் இதயத்தில் ஏற்பட்ட இரத்த நாள அடைப்பை சத்திர சிகிச்சை மூலம் குணப்படுத்தி சாதனை படைத்துள்ளார்கள்.

இது குறித்து அந்த தனியார் மருத்துவமனை வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

தமிழகத்தின் தென்பகுதி நகரான காரைகுடியைச் சேர்ந்த தம்பதிக்கு பிறந்த பெண் குழந்தையொன்று, பிறந்த நான்கு நாட்களே ஆன நிலையில், இதயத்திலிருந்து இரத்தத்தை பிற உடல் உறுப்புகளுக்கு எடுத்துச் செல்லும் வலது புற இரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டிருந்தது. இந்த பாதிப்பு அந்த குழந்தை, தாயின் கருவில்இருக்கும் போதே பரிசோதனைகளின் மூலம் கண்டறியப்பட்டிருந்தது. அதனால் அக்குழந்தை பிறந்தவுடன் சத்திர சிகிச்சை செய்து இந்த பாதிப்பை நீக்க வேண்டியதிருந்தது.

இதன் போது,குழந்தை பிறந்த நான்காவது நாளில் அதன் தொடைப்பகுதியில் சிறிய அளவில் துளையிட்டு, அதன் வழியாக குழாயை செருகி, சிறிய பலூன் உதவியுடன் இதயத்தில் அடைப்பு உள்ள பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு வலைக்குழாய் பொருத்தப்பட்டது. பச்சிளங்குழந்தை என்பதால் இதயமும், இரத்தநாளங்களும் மிகச்சிறிய அளவிலேயேயிருந்தது. இருப்பினும் வெற்றிக்கரமாக வலைக்குழாய் பொருத்தப்பட்டு இதய அடைப்பு நீக்கப்பட்டது.’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தகவல் : சென்னை அலுவலகம்