வறுமையை ஒழித்துக்கட்டும் கிராம சக்தி மக்கள் இயக்கத்தை மக்கள் மயப்படுத்தும் தேசிய நிகழ்வு நாளை பிற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறும்.

ஐக்கிய நாடுகள் சபையின் பேண்தகு அபிவிருத்தி இலக்குகளின் அடிப்படையில் 2030 ஆம் ஆண்டு வறுமையற்ற இலங்கை தேசத்தை உருவாக்கும் நோக்குடன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் வழிகாட்டலில் பேண்தகு அபிவிருத்தி தொலைநோக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இலங்கை மக்களின் உண்மையான சுதந்திரம், சமத்துவம் குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கு பொருளாதார பலமற்ற மக்களை பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் வலுவூட்டும் வகையில் 2017ஆம் ஆண்டு வறுமையை ஒழித்துக்கட்டும் வருடமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது எமது நாட்டில் வறுமைக்கான சவால்களை இனங்கண்டு அதற்கு நிலையான தீர்வுகளை வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தேசிய நிகழ்ச்சித்திட்டமான கிராம சக்தி மக்கள் இயக்கத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

வறிய மக்கள் அதிகம் வாழும் கிராமங்களுக்கு முன்னுரிமையளித்து கிராம சக்தி மக்கள் இயக்கத்தை நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தவுள்ளதுடன், ஆரம்பத்தில் 1000 கிராமங்களையும் 2020 ஆம் ஆண்டாகும்போது 5000 கிராமங்களையும் இதன் மூலம் உள்ளடக்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. 

தற்போது மக்களால் நிர்வகிக்கப்படும் கிராம அபிவிருத்தி திட்டத்தை பின்பற்றி அனைத்து மக்கள் பிரிவினருக்கும் சம சந்தர்ப்பத்தை வழங்கும் நியாயமான சமூகத்தை உருவாக்குவது கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் நோக்கமாகும்.

கிராம சேவகர் பிரிவுகளில் வாழும் வறிய மக்களின் வாழ்க்கைத் தேவைகள், பெண்கள் மற்றும் தொழில் வாய்ப்பற்ற இளைஞர் யுவதிகளின் வாழ்க்கைத் தேவைகள், வடக்கு கிழக்கு பிரதேசங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தேவைகள், வேறு வகையில் வலுவூட்டப்பட வேண்டிய பிரிவினர்கள், தொழில்முயற்சியை எதிர்பார்த்திருப்பவர்களுக்கு தேவையான வாழ்க்கைத் தேவைகள், பிரதேச மக்களை கடன் சுமையில் இருந்து விடுவிப்பதற்கான சந்தர்ப்பங்கள், தொழில் முயற்சிக்கான மூலதனங்களை வழங்குகின்ற சந்தர்ப்பங்கள் மற்றும் இனங்காணப்பட்டுள்ள வாழ்வாதாரங்களை வழங்குவதற்கான சந்தரப்பங்களின் நீடித்த தன்மை குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது

கிராம சக்தி நிகழ்ச்சித்திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வறுமையை ஒழித்துக்கட்டுவதற்கான நிகழ்ச்சித்திட்டங்களை மதித்து அவற்றுடன் இணைந்து நடைமுறைப்படுத்தப்படும் மக்கள் இயக்கமாகும் என்பதுடன், அரசாங்க துறை மக்கள் மற்றும் தனியார் துறையின் பங்களிப்புடன் வறுமையை ஒழித்துக்கட்டுவதற்காக நடைமுறைப்படுத்தப்படும் கூட்டு நிகழ்ச்சித்திட்டமாகும். 

கிராம சக்தி மக்கள் இயக்கத்திற்கான தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை வெளியிட்டு வைக்கும் தேசிய நிகழ்வு நாளை நடைபெறவுள்ளதுடன், 2017ஆம் ஆண்டுக்கான 1000 கிராமங்கள் நிகழ்ச்சித்திட்டத்தை அடையாளப்படுத்தப்படும் வகையில் நடைமுறைப்படுத்துதல், இற்றைப்படுத்தப்பட்ட 2040 கெமிதிரிய கிராமங்களை கிராமசக்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஒன்றிணைத்தல், வறுமையை ஒழித்துக்கட்டும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்திற்கான தனியார்துறை ஒத்துழைப்பை உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்தல் ஆகியன இதன்போது மேற்கொள்ளப்படவுள்ளது.