தீபாவளியினை முன்னிட்டு புத்தளப்பகுதியிலிருந்து தலவாக்கலைப் பகுதிக்கு வர்த்தக நடவடிக்கைக்காக வருகை தந்த இளைஞன் ஒருவர் 17.10.2017 அன்று இரவு 7.00 மணி முதல் காணவில்லையென தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு காணாமல் போயுள்ளவர் புத்தளம் கந்தகுடா பகுதியைச்சேர்ந்த முகமது நிலாம்தீன் முகமது அஸ்ஜட் வயது 18 என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

இவர் கடந்த 2017.10.10 திகதி தலவாக்கலை பகுதிக்கு வருகைதந்து தலவாக்கலை நகரசபையின் கடையொன்றினை கூலிக்காக பெற்று ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்துக்கு முன்பாக வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் கடந்த 17ம் திகதி இரவு கழிவறை செல்வதாக கூறிவிட்டு சென்ற இளைஞன் நேற்று வரை வராதமையினால் சக ஊழியர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் செய்த ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த இளைஞனுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.