அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் உள்ள தனது ‘ஓவல்’ அலுவலகத்தில் இன்று (18) தீபாவளி கொண்டாடினார். அவருடன், நிக்கி ஹாலே, சீமா வர்மா போன்ற அமெரிக்க-இந்தியப் பிரமுகர்கள் மற்றும் அரசாங்கப் பிரமுகர்கள் பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மங்கல விளக்கேற்றி விழாவை ஆரம்பித்து வைத்த ட்ரம்ப், அமெரிக்காவின் வளர்ச்சியில் அமெரிக்கவாழ் இந்தியர்களின் பங்களிப்பைப் புகழ்ந்து பேசினார்.

“அமெரிக்காவின் கலைத்துறை, விஞ்ஞான, மருத்துவ மற்றும் பாதுகாப்புத் துறைகளிலும் பெரும்பங்களிப்புச் செய்திருக்கும் அமெரிக்கவாழ் இந்தியர்களை நான் இத்தருணத்தில் பாராட்டுகிறேன். இந்தியாவுடன் அமெரிக்காவுக்கு இருக்கும் நெருங்கிய தொடர்புகளை இந்நேரத்தில் நினைவுகூருகிறேன். அதுபோல், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான எனது உறுதியான நட்பையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்” என்று ட்ரம்ப் தெரிவித்தார்.

அவருடன், அவரது மகள் இவங்க்கா ட்ரம்ப்பும் நிகழ்வில் கலந்துகொண்டார். கடந்த தீபாவளி தினத்தன்று இவங்க்கா ட்ரம்ப், வேர்ஜீனியா மற்றும் ஃப்ளோரிடாவிலுள்ள இந்துக் கோயில்களுக்குச் சென்று வழிபாடு நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

வெள்ளை மாளிகையில் தீபாவளிக் கொண்டாட்டங்களை ஆரம்பித்து வைத்தவர் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ். எனினும், அவரது ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற எந்தவொரு தீபாவளி கொண்டாட்டத்திலும் அவர் நேரடியாகக் கலந்துகொள்ளவில்லை.