பண்டாரகமையில், பொலிஸாருக்கும் கால்நடை கடத்தல்காரர்களுக்கும் இடையில் இன்று (18) காலை பரஸ்பரம் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

கிடைத்த துப்பு ஒன்றின் அடிப்படையில், மராவ பகுதியில் பயணிக்கும் வாகனங்களைச் சோதனையிடும் வகையில் பொலிஸார் வீதித் தடையை ஏற்படுத்தினர்.

அப்போது, அதிசொகுசு வேன் ஒன்று அவ்வீதி வழியாக வந்துள்ளது. அதை நிறுத்துமாறு பொலிஸார் சமிக்ஞை செய்தனர்.

ஆனால், வாகனத்தை நிறுத்துவதற்குப் பதிலாக வாகனத்துக்குள் இருந்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த பொலிஸார் உடனடியாக சுதாகரித்துக்கொண்டு பதில் துப்பாக்கித் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதற்கிடையில் அந்த வேன் வேகமாக சோதனைப் பகுதியைத் தாண்டிச் சென்றுவிட்டது.

பொலிஸார் துரத்திச் சென்றபோது, வேன் கைவிடப்பட்ட நிலையில் இருந்ததைக் கண்டார்கள். அந்த வேனைச் சோதனையிட்டதில், அதனுள் மாடு ஒன்றும், டி-56 ரகத் துப்பாக்கி ஒன்றும், கத்தி, கயிறு உட்பட நான்கு ஜோடி செருப்புகளும் அகப்பட்டன.

வாகனத்தின் இலக்கத் தகட்டை ஆராய்ந்ததில் அது போலியான வாகனத் தகடு என்பதையும் பொலிஸார் கண்டுபிடித்தனர்.

இச்சம்பவம் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.