பேரு­வளை பகு­தியைச் சேர்ந்த வர்த்­தகர் ஒரு­வ­ருக்கு சொந்­த­மான புலூ சபாயா ரக மாணிக்கக் கல் ஒன்று பட்டை தீட்ட கொடுக்­கப்­பட்ட இடத்தில் இருந்து கள­வா­டப்­பட்­டுள்­ளது. 2 கோடியே 11 இலட்­சத்து 10 ஆயிரம் ரூபா பெறு­ம­தி­யான இந்த மாணிக்கக்கல் திரு­கோ­ண­மலை - மூதூர் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட தோப்பூர் பகு­தியில் வைத்து பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வி­னரால் மீட்­கப்­பட்­டுள்ள நிலையில் அது தொடர்பில் ஐவர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் சட்­டத்­த­ரணி ருவன் குண­சே­கர தெரி­வித்தார். 

நேற்று பொலிஸ் தலை­மை­ய­கத்தில் இடம்­பெற்ற விசேட ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில், மாணிக்கக்கல் உரி­மை­யா­ள­ரையும் அழைத்து வந்து மீட்­கப்­பட்ட மாணிக்கக் கல்­லி­னையும் முன்­னி­லைப்­ப­டுத்­தி­ய­வாறு அவர் மேற்­படி சம்­பவம் குறித்து தகவல் வெளி­யிட்டார்.

பேரு­வ­ளையைச் சேர்ந்த மாணிக்கக் கல் வர்த்­த­க­ரான மொஹம்மட் றிஸ்வி மொஹம்மட் றிஸ்வான் என்­பவர், குரு­விட்ட பகு­தியைச் சேர்ந்த மாணிக்கக் கல் அகழ்வு வர்த்­தகர் ஒரு­வ­ரிடம் இருந்து நீல நிற  மாணிக்கக் கல் ஒன்­றினை கொள்­வ­னவு செய்­துள்ளார். அந்த மாணிக்கக் கல்­லினை அவர் பட்டை தீட்­டு­வ­தற்­காக கடந்த செப்­டம்பர் மாதம் 8 ஆம் திகதி கொள்­ளு­ப்பிட்­டியில் அமைந்­துள்ள பட்டை  தீட்டும் நிறு­வனம் ஒன்றில் ஒப்­ப­டைத்­துள்ளார். அதன் பின்னர் அன்­றைய தினம் குறித்த வர்த்­தகர் பேங்கொக் நக­ருக்கு வர்த்­தக நட­வ­டிக்கை தொடர்பில் சென்­றுள்ளார்.

இந்­நி­லையில் கொள்­ளு­ப்பிட்டி பட்டை தீட்டும் நிலை­யத்தில் இருந்து வர்த்­தகர்  றிஸ்வி றிஸ்­வானை கடந்த செப்­டம்பர் 12 ஆம் திகதி தொடர்­பு­கொண்­டுள்ள நபர் ஒருவர், அவ­ரது நீல மாணிக்கம் காணாமல் போயுள்­ள­தாக கூறி­யுள்ளார்.

இத­னை­ய­டுத்து வர்த்­தக நட­வ­டிக்­கையின் இடை நடு­வி­லேயே விட்டு வர்த்­தகர் நாடு திரும்பி அது தொடர்பில் தக­வல்­களைப் பெற்று  மாணிக்கக் கல்லை தேட ஆரம்­பித்­துள்ளார்.  பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­த­ரவின் தொலை­பேசி இலக்­கத்­துக்கு அழைத்­துள்ள வர்த்­தகர், பொலிஸ் மா அதி­ப­ரிடம் விட­யத்தை கூறி­யுள்ளார்.

   கடந்த செப்­டம்பர் 22 ஆம் திகதி இது தொடர்­பி­லான விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும் பொறுப்பு குற்றப் புல­னாய்வுப் பிரி­விடம் பொலிஸ் மா அதி­பரால் கைய­ளிக்­கப்­பட்­டது. இந் நிலையில் அது தொடர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்த குற்றப் புல­ன­ாய்வுப் பிரிவு, கொள்­ளு­ப்பிட்டி பட்டை தீட்டும் நிலை­யத்தின் சேவை­யாளர் ஒரு­வரைக் கைது செய்­த­துடன் அவரை விளக்­க­ம­றி­யலில் வைத்­துள்­ளது.

 இது தொடர்­பி­லான விசா­ர­ணைகள் குற்றப் புல­ன­ாய்வுப் பிரி­வி­னரால் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. இத­னி­டையே கடந்த சனி­யன்று பொலிஸ் மா அதி­பரின் தொலை­பேசி இலக்­கத்­துக்கு அழைப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்ள, பேரு­வளை வர்த்­த­க­ரான முறைப்­பாட்­டாளர், தனது காணாமல் போன மாணிக்கக் கல்லை ஒத்த மாணிக்கக் கல் ஒன்று திரு­மலை பகு­தியில் விற்­பனை செய்ய முயற்­சிக்­கப்­ப­டு­வ­தாக தகவல் கிடைத்­துள்­ள­தா­கவும் அது மறு நாள் வெளி­நாட்­டுக்கு கடத்­தப்­ப­ட­வுள்­ள­தாக தகவல் உள்­ளதால் உட­னடி நட­வ­டிக்கை எடுக்­கு­மாறும் கோரி­யுள்ளார்.

 அந்த தகவல் கிடைக்கும் போது யாழில் இருந்த பொலிஸ் மா அதிபர், அது தொடர்பில் உட­னடி நட­வ­டிக்கை எடுக்கும் பொறுப்பை பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவு (ரி.ஐ.டி) பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்­வா­விடம் கைய­ளித்­துள்ளார்.

  ரி.ஐ.டி.யின் 16 பேர் கொண்ட குழு­வொன்று அது தொடர்பில் தயார் செய்­யப்­பட்டு, காணாமல் போன மாணிக்கக் கல் தொடர்பில் படங்­களை வைத்து பயிற்­சி­ய­ளிக்­கப்பட்ட நிலையில் அன்­றைய தினம் இர­வோ­டி­ர­வாக திரு­கோ­ண­ம­லைக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.

அங்கு சென்ற பொலிஸ் குழு சிவில் உடை­யிலும் பொலிஸ் உடை­யி­லு­மாக சிறு குழுக்­க­ளாக பிரிந்து திட்­டத்தை அரங்­கேற்ற ஆரம்­பித்­துள்­ளது.  திரு­ம­லையின் மூதூர் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட தோப்பூர் பகு­திக்கு சென்ற பொலிஸ் குழு, அங்கு ஒரு கடையின் முன் வைத்து இடைத் தரகர் ஒரு­வரை சந்­தித்­துள்­ளனர். மாவ­னெல்லை பகு­தியில் இருந்து வரும் வர்த்­த­க­ராக தம்மை அடை­யா­ளப்­ப­டுத்­திக்­கொண்டே அவர்கள் இவ்­வாறு  சந்­தித்­துள்­ளனர்.

இதன்­போது அந்த இடைத் தர­கரின் வீட்டை அவ­ருக்கு தெரி­யா­ம­லேயே மூன்று பொலிஸார் அவ­தா­னிக்க  ஆரம்­பித்­துள்ளனர். அப்­போது மாணிக் கக் கல்லினை விற்­பனை  செய்ய மூன்று நபர்கள் அவ­ரது வீட்­டுக்கு வந்­துள்­ளனர். இத­னை­ய­டுத்து வர்த்­த­கர்­க­ளாக முக­மூடி அணிந்த பொலி­ஸாரை இடைத் தரகர் மாணிக்கக் கல் விற்­பனை செய்ய வந்த மூவ­ரி­டமும் அறி­முகம் செய்­துள்ளார்.

இதன்­போது முதலில் மஞ்சள் நிற கல் ஒன்­றினை அவர்கள்  மாறு வேடத்தில் இருந்த பொலி­ஸா­ருக்கு காட்­டி­யுள்ளனர். அது போலி மாணிக்கக்கல் என பின்னர் தெரியவந்­தது. அதனை பெற்­றுக்­கொள்ள மாறு­வே­டத்தில் இருந்த பொலிஸார் விருப்பம் இன்­மையை வெளி­யி­டவே, நீல மாணிக்கக் கல்லின் புகைப்­படம் ஒன்­றினை அவர்கள் காட்­டி­யுள்­ளனர். ஏற்­க­னவே புகைப்­ப­டத்தை பார்த்து பயிற்சி பெற்­றி­ருந்த மாறு வேடத்தில் இருந்த பொலிஸார், அந்த மாணிக்கக்கல் திரு­டப்­பட்ட மாணிக் கல் என்­பதை விளங்­கிக்­கொண்ட நிலையில் அதனை கொள்­வ­னவு செய்ய சம்­மதம் வெளி­யிட்­டனர்.

அதன் விலை 150 இலட்சம் என அவர்கள் தெரி­விக்க அதனை 50 இலட்­சத்­துக்கு பொலிஸார் கோரி­யுள்­ளனர். இவ்­வாறு பேச்­சு­வார்த்தை நடை­பெறும் போதே திட்டப் படி சீரு­டையில் இருந்த குழு­வி­ன­ருடன் வந்த பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவு அதி­கா­ரிகள் மாணிக்கக் கல்­லுடன்  அதனை விற்க வந்த மூவ­ரையும் கைது செய்­தனர்.

 50 வய­தான மைக்கல் ஸ்ரெனிஸ்லெஸ், 26 வய­தான சதா­சிவம் உத­ய­குமார், 32 வய­தான கலீலுர் ரஹ்மான் மொஹம்மட் நெளபர் ஆகி­யோ­ரையே பொலிஸார் இவ்­வாறு கைது செய்­தனர்.

இத­னை­ய­டுத்து அவர்­க­ளிடம் முன்­னெ­டுத்த விசா­ர­ணையில் 30 வய­தான முன்னாள் விடு­தலை புலி உறுப்­பி­ன­ரான புனர்­வாழ்­வ­ளிக்­கப்­பட்டு தற்­போது சாரதி, நிறப் பூச்சு வேலை­களை முன்­னெ­டுக்கும் வெலேரிட் ஜொன்ஸன் தொடர்பில் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. குறித்த நபர் கொள்­ளுப்­பிட்­டியில் உள்ள மாணிக்கக் கல் பட்டை தீட்டும் நிறுவனத்தில் செப்டெம்பர் மாதம் நிறப் பூச்சு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதும் அவரே அக்கல்லை திருடி, தனது மாமனாரான மைக்கல் ஸ்ரெனிஸ்லெஸ்ஸிடம் கொடுத்துள்ளமையும் அந்த விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அவரையும் கைது செய்த பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு, நால்வரையும் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் கையளித்துள்ளனர். அவர் கள் நால்வரும் கல்கிசை நீதிவான் முன்னி லையில் ஆஜர் செய்யப்பட்டு எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப் பட்டுள்ளனர்.