அரசியல் கைதிகள் வழக்கு விசாரணைகளை வவுனியாவிற்கு இடமாற்றம் செய்வது தொடர் பில் நாளை வியாழக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்மானம் எடுப்போம். இது தொடர் பில் பேசித் தீர்க்க நாம் தயாராக உள்ளோம். அத்துடன் அரசியல் கைதிகளின் வழக்கு விசார ணைகளை துரிதப்படுத்த தயாராக உள்ளோம் என சபையில் அரசாங்கம் திட்டவட்டமாக  அறிவித்தது.  

அத்துடன் உண்ணாவிரதம் இருக்கும்  அரசியல் கைதிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தயாராக உள்ளோம். மேலும் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் அடுத்த வருடம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும்  அரசாங்கத்தின் அமைச்சர்கள் குறிப்பிட்டனர்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற  அரசியல் கைதிகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர்களான சாகல ரத்நாயக்க, டி.எம் சுவாமிநாதன் மற்றும் நீதி பிரதி அமைச்சர் சமிந்த துஷ்மந்த  ஆகியோர்  மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினர்.  

சட்டம் , ஒழுங்கு அமைச்சர்  சாகல ரத்நாயக்க உரையாற்றுகையில்,

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை  கொண்டு வருவதற்கு நாம் திட்டமிட்டுள்ளோம்.  அரசியல் கைதிகள்  குறித்த  வழக்கு விசாரணை தொடர்பில் என்னால் எதுவும் கூறமுடியாது. அதற்கு நீதி அமைச்சர்தான பதில் வழங்க வேண்டும். 2015 ஜனவரி மாதமளவில் அரசியல் கைதிகள்  180 பேர் இருந்தனர். எனினும் அதில்  40 பேர் விடுதலை செய்யப்பட்டனர். 25 பேர் புனர்வாழவு அளிக்கப்பட்டனர். ஒருவர் இருதய நோயினால் உயிரிழந்துள்ளார். 74 பேர் பாரதூரமான வழக்கின் கீழ் உள்ளனர்.

 சட்டமா அதிபர் திணைக்களம் உரிய முறையில் செயற்படுவதாக இல்லை. அத்துடன் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தமிழர் மாத்திரம் கைது செய்யப்படவில்லை. சிங்களவர்களும் முஸ்லிம்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 புதிய பயங்கரவாத  எதிர்ப்பு சட்டமூலம் தற்போது அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு சட்டவாக்க திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன்படி அடுத்த வருடம் குறித்த சட்டமூலம் பாராளுமன்றத்தில்  சமர்ப்பிக்கப்படும். பயங்கரவாத தடை சட்டம் தற்போது ஒத்துவராது என்றாலும் தற்போது கைது செய்யப்பட்டவர்கள் யுத்த காலப்பகுதிக்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்ட பயங்கரவாத தடை சட்டத்தின் பிரகாரம் கைது செய்யப்பட்டனர்.

எனவே அரசியல் கைதிகள் தொடர்பாக நீதி அமைச்சர் வெளிநாட்டில் இருந்து வந்தவுடன் நாளை வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் பேச்சுவார்த்தை நடத்துவோம். அதன்போது கலந்துரையாடி முடிவுக்கு வருவோம். மேலும் அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பிலேயே கொழும்பிலும் அநுராதபுரத்திலும் விசேட நீதிமன்றம் நிறுவப்பட்டது. அரசியல் கைதிகளின் நலனுக்காகவே இவற்றை அமைத்தோம் என்றார்.

நீதி பிரதி அமைச்சர் சமிந்த துஷ்மந்த குறிப்பிடுகையில்,

அரசியல் கைதிகள் விடயத்தில் நல்ல தீர்வினை காண்பதற்காகவே வவுனியாவில் இருந்து அநராதபுரத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது. எனினும் இதில் சிக்கல்கள் இருந்தால் அது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம். அத்துடன அரசியல் கைதிகள் வழக்குகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுப்போம் என்றார்.

இதன்போது அமைச்சர் சுவாமிநாதன் பதிலளிக்கையில்,

அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் சட்டமா அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். இதன்போது இரு வாரங்களில் பாரதூரமான வழக்குகளை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்று கூறினார். அத்துடன் அநுராதபுரம் நீதிமன்றத்தில் வழக்கு மாற்றப்பட்டமை குறித்தும் பேசினேன். இதன்போது மொழிபெயர்ப்பு வழங்குவதற்கு தயாராக இருப்பதாக கூறினர். மேலும் தற்போது உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகள் நல்ல நிலைமையில் இல்லை. ஆகவே அவர்களுக்கான வைத்திய சிகிச்சை வழங்கி வருகின்றோம். வைத்தியர்களையும் ஈடுப்படுத்தியுள்ளோம் என்றார்.