பாரதத்தாயின்  புதல்வர்களின் ரத்தம், வியர்வையில் எழுப்பப்பட்ட தாஜ்மஹால் பாதுகாக்கப்படும் என இந்தியா உத்திரப்பிரதேச  முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதி அளித்துள்ளார்.

பாரதீய ஜனதா கட்சி எம்.எல்.ஏ. சங்கீத் சோம் தாஜ்மஹால் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியதையடுத்து எழுந்த சர்ச்சைகளினால் உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் பாரதமாதாவின் புதல்வர்களின் ரத்தம், வியர்வையால் எழுப்பப்பட்ட தாஜ்மஹாலை பாதுகாப்போம் என்று உறுதி அளித்துள்ளார்.

யோகி ஆதித்யநாத் அக்டோபர் 26 ஆம் திகதி ஆக்ராவுக்குச் சென்று சுற்றுலாத்திட்டங்களை மேற்பார்வையிடப் போவதாகவும்,  தாஜ்மஹாலை யார் கட்டினார்கள் என்பது முக்கியமல்ல அது ஒரு வரலாற்றுச் சின்னம் என்றும் நகரத்துக்கு 370 கோடி ரூபா பணித்திட்டம் உள்ளது என்றும் சுற்றுலாப்பயணிகளுக்கு பாதுகாப்பும் வசதியும் அளிப்பது அரசின் கடமை என்றும் கூறினார். 

சங்கீத் சோம் தாஜ்மஹாலைக் கட்டியவர்கள் இந்தியாவின் மீது படையெடுத்த முகலாய துரோகிகள் என்று கூறியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது, அதற்கு செங்கோட்டையும் அவர்கள் கட்டியதுதான் சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சியை வேறு இடத்துக்கு மாற்றுவீர்களா என்று அஸாதுதின் ஓவைசி உட்பட பலரும் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில்தான் கோரக்பூரில், “தாஜ்மஹாலை யார்? எப்படி? கட்டினார்கள் என்பதல்ல விஷயம், அது பாரதமாதா புதல்வர்களின் இரத்தம், வியர்வையினால் எழுப்பப்பட்ட சின்னம் அதன் கட்டிடக்கலையினால் உலகம் முழுதும் புகழ்பெற்றுள்ளது. இது வரலாற்றுச் சின்னம் இதனைப் பாதுகாப்பது அரசின் கடமையாகும்” என்றார் முதல்வர் யோகி ஆதித்யநாத்.