மஸ்கெலியா பிரவுண்லோ பகுதியில் நேற்று இரவு 8 மணியளவில் முச்சக்கரவண்டிகள் இரண்டு நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 6 பேர் படுகாயங்களுக்குள்ளாகி மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மஸ்கெலியா - நோட்டன்பிரிட்ஜ் பிரதான வீதியில் மஸ்கெலியா பகுதியிலிருந்து பிரவுண்லோ நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்றும் மவுஸ்ஸாக்கலையிலிருந்து மஸ்கெலியா பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த மற்றுமொரு முச்சக்கரவண்டியும் மஸ்கெலியா பிரவுண்லோ பகுதியில் இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் இரு முச்சக்கரவண்டியிலும் பயணித்த 6 பேர் கடும்காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும், அதிக வேகம் மற்றும் கட்டுப்பாடு இல்லாததன் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவ்விபத்துடன் தொடர்புடைய இரு முச்சக்கரவண்டிகளையும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.