இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் வியாழக்கிழமை இலங்கை வருகின்றார்.

இலங்கை - இந்திய கூட்டு ஆணைக்குழுவில் கலந்து கொள்ளும் நோக்கில் நாட்டிற்கு வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் , 6 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ளார்.

பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் இரு நாட்டு பல் துறைசார் உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இலங்கை - இந்திய கூட்டு ஆணைக்குழுவின் சந்திப்பு வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெறவுள்ளது. இதற்கான முன்னாயத்தங்களை செய்வதற்காக கடந்த 12 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இந்திய வெளியுறவு செயலர் ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்ததுடன், அரசாங்கத்தின் உயர் மட்டத்தினருடன் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜின் இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்தின் உயர் மட்டத்தினரை சந்தித்து இலங்கை - இந்திய கூட்டு ஆணைக்குழுவின் செயற்பாடுகள் மற்றும் மீனவர் பிரச்சினை தொடர்பில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கவுள்ளார்.

மேலும் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் சந்திக்கவுள்ளார்.

இந்த சந்திப்புகளின் பின்னர் மறுநாள் அதாவது வெள்ளிக்கிழமை முற்பகல் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யும் இந்திய வெளிவிவகார அமைச்சர் அங்கு வடமாகாண முதலமைச்சரை சந்திக்கவுள்ளார். இந்திய நிதியுதவியின் கீழ் வடக்கில் முன்னெடுக்கப்படும் வீட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட இந்திய அபிவிருத்தி திட்டங்களை நேரடியாக சென்று பார்வையிட உள்ளதுடன் மக்களையும் இதன் போது சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.