இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் துறை பஸ்களுக்கு ஒரே நேரசூசி அட்டவணையின் கீழ் போக்குவரத்தில் ஈடுபடுவது தொடர்பில், அந்நேரசூசி அட்டவணை கிடைத்த பின்னரே அது தொடர்பில் ஆராயப்படும் என தனியார் பஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் கெமுனு விஜேரட்ண நேற்றுத் தெரிவித்தார்.

இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளுக்கும் தனியார் பேருந்துகளுக்கும் பொதுவான ஒரு நேரசூசி அட்டவணை எதிர்வரும் மார்ச் மாதம் 01 ஆந் திகதி அமுல்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா கடந்த வௌ்ளிக்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தார்.

தனியார்துறை பேருந்து சேவைகளின் சில குறைபாடுகளை சுட்டிக்காட்டிய அவர், தனியார்துறை பேருந்துகள் தமக்கு அனுமதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களிலுள்ள தூர இடங்களுக்கு பயணிகளை ஏற்றச்செல்வதில்லையெனவும் அத்துடன் மாலை 6.30 மணியளவில் தமது சேவைகளை இடைநிறுத்திக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

இலங்கையில் இனி எதிர்காலத்தில் பேருந்துகளுக்கு வழித்தட அனுமதிப்பத்திரம் வழங்கப்போவதில்லையெனவும் அங்கு தெரிவிக்கப்பட்டது.

இலங்கையில் 21,000 தனியார் பஸ்கள் சேவைகளில் ஈடுபடுத்தப்படுகின்றன. ஆனால் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான 6,000 பஸ்களே காணப்படுகின்றன. இதனிடையே பொதுவான நேரசூசி அறிமுகப்படுத்தப்படுவதால் அரச ஊழியர்களுக்கு நட்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதா எனவும் கேள்வியெழுந்துள்ளது.

பொதுவான நேர அட்டவணை குறித்து, அகில இலங்கை போக்குவரத்து சங்கத்தின் பொதுச்செயலாளரான சேபால லியனகே கருத்து தெரிவிக்கையில், இந்தப் பொதுவான நேரசூசி அட்டவணையை அறிமுகப்படுத்தினால் இலங்கை போக்குவரத்துச்சபை பெரும் நட்டத்தை எதிர்கொள்ளத் தயாராக வேண்டுமெனத் தெரிவித்தார்.

இலங்கையில் அரச பேருந்துகள் தமது நீண்ட நேரப் பயணங்களை உள்ளடக்கிய ஒரு தனியான நேர அட்டவணையை தற்போது கொண்டிருப்பதனால் இலங்கை போக்குவரத்துத்துறை சிறந்த வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியுமாகவிருக்கிறது. மற்றும் இந்நேர அட்டவணை மாற்றமடைந்து பொதுவான நேர அட்டவணை ஏற்படுத்தப்படும் பட்சத்தில் இலங்கை போக்குவரத்துச்சபை இழப்பினை எதிர்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்தார்.