இங்கிலாந்தின் சகலதுறை ஆட்டக்காரர் பென் ஸ்டோக்ஸ் நேற்று (14) தனது நெடுநாள் காதலியும் தனது இரண்டு குழந்தைகளுக்குத் தாயுமான க்ளேர் ரெட்க்ளிஃப்பை நேற்று திருமணம் முடித்தார்.

இங்கிலாந்தின் சம்மர்செட் நகரில் நடைபெற்ற இந்தத் திருமண நிகழ்வில் ஜோ ரூட், ஸ்டுவர்ட் ப்ரோட் மற்றும் அலிஸ்டேர் குக், இயொன் மோர்கன், க்ரஹெம் ஒனியன்ஸ் உள்ளிட்ட வீரர்கள் கலந்துகொண்டனர்.

திருமண நிகழ்வின்போது ஸ்டோக்ஸின் வலது கையில் கட்டுப் போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இருபத்தாறு வயதான ஸ்டோக்ஸ், கடந்த மாதம் பிஸ்டலில் உள்ள இரவு விடுதி ஒன்றின் வெளிப்புறம் மற்றொருவரைத் தாக்கிய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தார். அன்றைய தினம், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றிருந்தது.

கைது செய்யப்பட்ட ஸ்டோக்ஸ், மறுநாள் (27) எந்தவித குற்றச்சாட்டும் பதிவுசெய்யப்படாத நிலையில் விடுவிக்கப்பட்டார். எனினும், சம்பவம் குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சம்பவம் குறித்த முழுமையான விளக்கத்தை நேரம் வரும்போது ஸ்டோக்ஸ் வெளிப்படையாக அறிவிப்பார் என்று அவரது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 28ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ‘ஆஷஸ்’ தொடரில் விளையாடுவதற்காக அவுஸ்திரேலியா செல்லவுள்ள குழுவுடன் புது மாப்பிள்ளை பென் ஸ்டோக்ஸ் பயணிக்கப்போவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அவரது பெயர் இன்னும் ஆஷஸ் தொடருக்கான வீரர்களின் பட்டியலில் இருந்து விலக்கப்படவில்லை எனவும் தெரியவருகிறது.