பிரான்ஸ் இராணுவத்தால் வாடகைக்கு அமர்த்தப்பட்டிருந்த சரக்கு விமானம் ஒன்று சற்றுமுன் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த நான்கு பேர் உயிரிழந்தனர். ஏனைய ஆறு பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உக்ரேனியத் தயாரிப்பான இந்த ‘அண்டனோவ்’ ரக விமானம், ஐவரி கோஸ்ட் நகரின் கடற்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. கடும் மழை மற்றும் இடி-மின்னல் நிறைந்த சூழலில் தரையிறங்க முயற்சித்தபோதே விமானம் விபத்துக்குள்ளானதாக ஐவரி கோஸ்ட் இணையதளம் ஒன்று தெரிவித்துள்ளது.

விபத்துக்குள்ளான சில மணி நேரங்களில் விமானத்தின் சிதைவுகள் கரையொதுங்கியதாகவும், விமானத்தினுள் இருந்த ஆறு பேருக்கு கடற்கரையில் வைத்து முதலுதவிகள் அளித்த பின்னர் அவர்கள் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிஹாதிகளுக்கு எதிரான ‘ஒபரேஷன் பார்க்கானே’ என்ற இராணுவ நடவடிக்கைக்காகவே இந்த விமானம் வாடகைக்கு அமர்த்தப்பட்டிருந்ததாக பிரான்ஸ் இராணுவத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.