பாகிஸ்தானுக்கு எதிராக லாகூரில் நடைபெறவுள்ள மூன்றாவதும் இறுதியுமான இ20 போட்டியை வேறு இடத்துக்கு மாற்றுமாறு இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் கையெழுத்திட்டு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2009ஆம் ஆண்டு, லாகூரில் போட்டியொன்றில் கலந்துகொள்ளச் சென்றிருந்த இலங்கை அணி வீரர்கள் பயணித்த பேருந்து மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. கிரிக்கெட் வீரர்கள் மீது நடத்தப்பட்ட முதலாவது வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவமாக இது பதிவானது.

இந்நிலையில், அந்தத் ‘துன்பியல்’ சம்பவத்துக்கு முகங்கொடுத்த வீரர்கள் சிலர், மீண்டும் அதே இடத்துக்குச் செல்வதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் ஏனைய வீரர்களும் குறித்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

இவ்விவகாரம் குறித்து கவனம் செலுத்திவரும் இலங்கை கிரிக்கெட் சபை, இலங்கை அணி வீரர்களை சமாதானப்படுத்தி, லாகூருக்கு அழைத்துச் செல்ல முயற்சிப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இது குறித்து கருத்துத் தெரிவித்த இலங்கை கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா, வீரர்களின் பாதுகாப்புக்கே முதலிடம் வழங்கப்படும் என்றும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று (16) கூடவுள்ள நிர்வாகக் குழுக் கூட்டத்திலேயே வீரர்கள் செல்வதா, இல்லையா என்பது பற்றித் தீர்மானிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், வீரர்கள் லாகூருக்குச் செல்ல வேண்டும் என்பதில் இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் திலங்க சுமதிபாலவும் விளையாட்டுத் துறை அமைச்சும் உறுதியாக இருப்பதாகத் தெரியவருகிறது. அடுத்த சில நாட்களில் லாகூருக்குச் செல்ல வீரர்களை ஒத்துக்கொள்ள வைக்கும் முயற்சி எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.

இவ்விவகாரம் குறித்து வீரர்களோ, கிரிக்கெட் சபையோ இதுவரை மென்மையான போக்கையே கடைப்பிடித்து வருகின்றனர். லாகூருக்குச் செல்ல முடியாது என உறுதியாக வீரர்கள் இதுவரை குறிப்பிடவில்லை என்பதுடன், லாகூருக்குச் செல்ல மறுக்கும் வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் அறிகுறிகள் இலங்கை கிரிக்கெட் சபையால் இதுவரை வெளியிடப்படவில்லை.

ஒருவேளை தற்போதைய அணி வீரர்கள் உறுதியாக மறுக்கும் பட்சத்தில், இரண்டாவது நிலை வீரர்களை லாகூருக்கு அனுப்பவும், அவர்களுடன், லாகூரில் விளையாடச் சம்மதிக்கும் தற்போதைய தேசிய அணி வீரர்களையும் இணைத்துக்கொள்ளவும் இலங்கை கிரிக்கெட் சபை ஆலோசனை செய்துவருவதாகத் தெரிகிறது. 

இதேவேளை, இலங்கை அணியின் இறுதி முடிவு பாகிஸ்தான் கிரிக்கெட் சபையைப் பாதிப்பதாகவே அமையவுள்ளது. அண்மைக்காலமாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் திறமையான நிர்வாகத்தால் சர்வதேச அணிகளை பாகிஸ்தான் மண்ணில் விளையாடச் சம்மதித்திருக்கின்றன. இந்நிலையில் இலங்கை அணி லாகூருக்குச் செல்ல மறுக்கும் பட்சத்தில், அது பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு ஒரு பலத்த பின்னடைவாகவே கருதப்படும்.

இப்பிரச்சினை குறித்து முடிவெடுக்க உதவும் வகையில், பாகிஸ்தானின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆராய சர்வதேச கிரிக்கெட் சபையின் பிரதிநிதிகள் பாகிஸ்தான் செல்லவுள்ளனர்.