தெற்கு டெல்லியின் சைதுலாஜாப் பகுதியில் உள்ள வீடொன்றில், வெட்டிக் கொல்லப்பட்ட இளைஞர் ஒருவரின் உடல் பாகங்கள் குளிர்சாதனப் பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட இளைஞர் உத்தரகண்ட்டைச் சேர்ந்த விபின் ஜோஷி (26) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன் காணாமல் போன விபின் ஜோஷியை அவரது குடும்பத்தினர் தேடி வந்துள்ளனர். அதன்படி, விபின் ஜோஷியின் நண்பரான பாதல் மந்தால் என்பவரின் வீட்டுக்கும் சென்றுள்ளனர்.

பாதலின் வீடு மூடப்பட்டிருந்தபோதும், வீட்டினுள் இருந்து துர்நாற்றம் வீசுவதை உணர்ந்த விபினின் உறவினர்கள் பொலிஸாருக்குத் தகவல் அளித்துள்ளனர்.

இதன் பேரில் அங்கு சென்ற பொலிஸார், வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். அங்கு தேடுதல் நடத்தியபோதே குளிர்சாதனப் பெட்டியில் ஜோஷியின் உடல் பாகங்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள பொலிஸார், பாதலைத் தேடும் நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளனர்.