தீபாவளியை முன்னிட்டு அட்டனில் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பண்டிகையை முன்னிட்டு நகருக்கு வரும் நுகர்வோரின் நலன் கருதியே இரவு-பகல் விசேட  பொலிஸ் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

நகரின் பிரதான பாதசாரிக் கடவைகளில் மாத்திரமே பாதசாரிகள் செல்லும் வகையில் நகரின் பிரதான பாதையின் இரு மருங்குகளிலும் இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டு சிவில் பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

அட்டன் வர்த்தகர்களின் வேண்டுகோளுக்கிணங்க, தெரிவு செய்யப்பட்ட இடங்களில் மாத்திரமே தற்காலிகக் கடைகள் அமைக்க அனுமதியளித்துள்ளதாகவும் தீபாவளி பண்டிகை நிறைவுபெறும் வரை பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் நகரசபை அதிகாரிகள் தெரிவித்தனர் 

அட்டன் வரும் நுகர்வோர் தமது பணம் மற்றும் கொள்வனவு செய்யும் பொருட்கள் தொடர்பில் கவனத்துடன் இருக்குமாறும் அட்டன் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.