இலங்கை அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 83 ஓட்டங்களால் வெற்றிபெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இரு அணிகளுக்குமிடையிலான முதல் ஒருநாள் போட்டி ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இடம்பெற்றது.

இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, பாபர் அஷாமின் சதத்தின் உதவியுடன் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து  292 ஓட்டங்களை குவித்தது.

பாபர் அஷாம் 103 ஓட்டங்களை பெற்று தனது 6ஆவது சதத்தை பூர்த்திசெய்ததுடன், அதிரடியாக ஆடிய மலிக் 81 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இலங்கை அணி சார்பாக பந்து வீச்சில் சுராங்க லக்மால் 37 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

293 ஓட்டங்களைப்பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை  அணியின் ஆரம்ப விக்கட்டுகள் அடுத்தடுத்து சரிக்கப்பட்டன. 

டிக்வெல்ல 19, சந்திமால் 4, குசால் மெண்டிஸ் 3, சிறிவதர்தன 0 ஓட்டங்களுக்கு ஆ ட்டமிழக்க, இலங்கை அணி ஒரு கட்டததில் 67 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்நிலையில் திஸர பெரோ 21 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, மறுமுனையில் திரிமான்னே 53 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார். 

இந்நிலையில் அடுத்து களமிறங்கிய அகில தனஞ்சய, ஜெப்ரி வெண்டர்சே ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எட்டாவது விக்கட்டுக்காக 68 ஓட்டங்களை பகிர்ந்து இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கையை 200 ஆக உயர்த்தியது.

அகில தனஞ்சய தனது முதலாவது சர்வதேச ஒருநாள் அரைச்சதத்தை பூர்த்திசெய்ததுடன், ஜெப்ரி வெண்டர்சே 25 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 209 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 83 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இந்த போட்டியின் சிறப்பாட்டக்காரராக பாகிஸ்தான் அணியின் சொயிப் மலிக் தெரிவுசெய்யப்பட்டதோடு, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் அணி 1-0 என முன்னிலைப்பெற்றுள்ளது.