பர்க்கின்சன்ஸ் எனப்படும் நடுக்குவாத நோயிற்கு மூளையில் சிப் எனப்படும் மின் முனை கருவிகளைப் பொருத்தி குணப்படுத்தும் நவீன சிகிச்சையை சென்னையிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனை மேற்கொண்டு வெற்றிக் கண்டிருக்கிறது.

இது குறித்து அந்த மருத்துவமனை வெளியிட்டிருக்கும் செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது..,

கேரளாவைச் சேர்ந்த 43 வயதுடைய ஆண் ஒருவர், சவூதி அரேபிய நாட்டில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவருக்கு 5 ஆண்டுகளுக்கு முன் இடதுபுறத்தில் நடுக்கம் ஏற்பட்டு, அது பரவத் தொடங்கியிருக்கிறது. இதற்காக அவர் மருத்துவர்களை சந்தித்து, ஆலோசனைப் பெற்று, மருந்துகளை சாப்பிட்டு வந்திருக்கிறார். ஆனால் பிரச்சினை அதிகமானதால் வேலையை விட்டுவிட்டு இந்தியாவிற்கு திரும்பியுள்ளார். அவர் மருத்துவ சிகிச்சைக்காக எங்களுடைய மருத்துவமனைக்கு வந்தார். அவரை நன்கு பரிசோதித்த பின், நோயாளியை மயக்க நிலைக்கு கொண்டு செல்லாமல், விழித்திருக்கும் நிலையிலேயே இதற்கான நவீன சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது, அவரது மூளைப் பகுதியில் சிறிய அளவிலான மின் முனைகள் பொருத்தப்பட்டன. இதன் காரணமாக உடல் உறுப்புகளின் செயல்பாடுகளில் ஏதேனும் பாதிப்பு இருக்கிறதா? என்று அறிய அவரின் கை கால்களை அசைக்கும் படியும், பேசும் படியும் கேட்டுக்கொண்டோம். அவரும் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து மூளைப் பகுதியில் உள்ள சிப் வடிவிலான சிறிய மின் முனைகளை இயக்கும் வகையில் அவரின் மார்பு சுவர் பகுதியில் பற்றரியுடனான கருவி பொருத்தப்பட்டது. இந்த பற்றரியின் மூலம் மூளையில் பொருத்தப்பட்டுள்ள மின் முனைகள் இயக்கம் பெற்று, உடல் இயக்கத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் பகுதியை தூண்டி இயங்க செய்தன. இதன் காரணமாக நோயாளி குணமடைந்தார்.’ என்று அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே இது குறித்து அந்த மருத்துவமனையின் மருத்துவ நிபுணர் டொக்டர் சைமன் பேசும் போது,‘ இவ்வகையினதான சத்திர சிகிச்சை குறித்த விழிப்புணர்வு மக்களிடத்தில் ஏற்படவேண்டும்’ என்றார்.

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்