இங்கிலாந்து இளவரசி கேட் மிடில்டனின் உறவினர் ஒருவர், தனது மனைவியைத் தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கெரி கோல்ட்ஸ்மித் - ஜூலி ஆன் கோல்ட்ஸ்மித் தம்பதியர் நேற்று முன்தினம் (12) இரவு, விருந்து ஒன்றுக்காகச் சென்றிருந்தனர்.

அங்கே அளவுக்கு அதிகமாக மது அருந்திய கெரி, நள்ளிரவில் தனது மனைவியுடன் வீடு திரும்பியுள்ளார்.

வழியில், கெரியின் கொக்கெய்ன் போதைப்பொருள் பாவனை குறித்து இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

போதையில் இருந்த கெரி கோபம் தலைக்கேறவே தனது மனைவியின் முகத்தில் பலமாகக் குத்து விட்டுள்ளார். நிலைதடுமாறிக் கீழே விழுந்த ஜூலியின் தலை நடைபாதைக் கல்லில் மோதியதால், அவர் நினைவிழந்தார்.

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

இத்தாக்குதல் குறித்து அறியவந்த பொலிஸார் கெரியை நேற்று (13) அதிகாலை கைது செய்தனர்.