கேப்­பாப்­பு­லவில் மிகு­தி­யாக உள்ள 111 ஏக்கர் காணி­களை விடு­விப்­ப­தற்கு 148 மில்­லியன் ரூபா இரா­ணு­வத்­தி­ன­ருக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. இதற்­கி­ணங்க டிசம்பர் மாதத்­திற்குள் இந்தக் காணிகள் பொது­மக்­க­ளிடம் மீள ஒப்­ப­டைக்­கப்­படும் என்று சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு புனர்­வாழ்­வ­ளிப்பு மீள்­கு­டி­யேற்றம் மற்றும்  இந்து மத அலு­வல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

கேசரியில் நேற்று வெளியான செய்தி தொடர்பில் விளக்கமளித்து அமைச்சர் அறிக்கையொன்றை விடுத்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

13.10.2017 வீர­கே­சரி நாளி­தழில் “எமது  உயிரை  விடவும் மேலா­னது” ஐக்­கிய  நாட்டு விசேட  பிர­தி­நிதி பப்­லு­விடம் கேப்­பா­பி­லவு மக்கள்  தெரி­விப்பு என்ற முன்­பக்க  தலை­யங்க செய்­தியில்  உள்­ள­டங்­கி­யுள்ள சில விட­யங்கள் சம்­பந்­த­மான விளக்கம் அமைச்சர் டி.எம். சுவா­மி­நாதன் தெளி­வு­ப­டுத்தியுள்ளார்.

“26.07.2017 ஆம் திகதி எமது அமைச்சில் கேப்­பா­பி­லவு காணி விடு­விப்பு தொடர்­பாக  விசேட கலந்­து­ரை­யாடல் எனது  தலை­மையில்  நடை­பெற்­றது. இக்­கூட்­டத்தில் எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்தன், பாரா­ளு­மன்ற உறுப்­பினர்  டக்ளஸ் தேவா­னந்தா, வட­மா­காண முத­ல­மைச்­சரின் பிர­தி­நி­தி­யாக வட­மா­காண  அமைச்சர்  அனந்தி சசி­தரன், திறைச்­சேரி பிர­தி­நிதி,  இரா­ணுவ தள­ப­தியின்  பிர­தி­நிதி, முல்­லைத்­தீவு  இரா­ணுவ அதி­கா­ரிகள், முல்­லைத்­தீவு  அர­சாங்க அதி­பரின்  பிர­தி­நிதி,  கரைத்­து­றைப்­பற்று பிர­தேச செய­லாளர்  மற்றும் கேப்­பா­பி­லவு மக்­களின் ஏழு பேரும் கலந்து கொண்­டார்கள்.  

முதல் கட்­ட­மாக 243  ஏக்கர் காணி  விடு­விக்­கப்­பட்­ட­தா­கவும்,  எமது  அமைச்சின் நிதி ஒதுக்­கீட்டின்  மூலம்  (5 மில்­லியன்) 189 ஏக்கர் காணி விடு­விக்­கப்­பட்­ட­தா­கவும்  இரா­ணு­வத்­தினர் இக்­கூட்­டத்தில் உறு­திப்­ப­டுத்­தினர். 

கேப்­பா­பி­லவு மக்­களின் நீண்ட கால கோரிக்­கை­யான 111 ஏக்கர் காணியை  மூன்றாம் கட்­ட­மாக விடு­விக்க  இரா­ணுவத் தரப்­பினர்  இங்கு இணக்கம் தெரி­வித்­தார்கள். இக்­கா­ணிக்குள்  உள்ள தங்­க­ளது  பாது­காப்பு   முகாம்­களை  அகற்றி மாற்­றி­டத்தில் அமைத்­திட  148 மில்­லியன் ரூபா தேவை­யென்­பதை அறி­யத்­தந்­ததின்  நிமித்தம்  இத்­தொ­கையை   அமைச்­ச­ரவை பத்­திரம்  ஒன்றின் மூலம் பெற்­றுத்­தர நான் இணக்கம் தெரி­வித்திருந்தேன்.

இம்­மு­டி­விற்கு  இக்­கூட்­டத்­தில் கலந்து கொண்ட கேப்­பா­பி­லவு  பொது­மக்கள் தமது நன்­றியை  தெரி­வித்­தார்கள்.  2017.08.01 அன்று என்னால் முன்­வைக்­கப்­பட்ட அமைச்­ச­ரவை  பத்­தி­ரத்தின் மூலம் 111 ஏக்கர் காணி கேப்­பா­பி­லவில்  விடு­விப்­ப­தற்­காக 148 மில்­லியன்  ரூபா  இரா­ணு­வத்­திற்கு  வழங்­கு­வ­தற்கு  அமைச்­ச­ரவை  அங்­கீ­காரம்  அளித்­தது. 

கடந்த மாதம் (24.08.2017) இத்­தொகை இரா­ணு­வத்­திற்கு  வழங்­கப்­பட்­ட­தற்கு  இணங்க 111 ஏக்கர்  காணியை  பொது­மக்­க­ளுக்கு  டிசம்பர்  மாதத்­திற்குள்  வழங்­கு­வ­தற்­கான நடை­முறை  வேலைத்­திட்­டங்­களை  இராணுவத் தரப்பு  மேற்கொண்டுள்ளது. 

உண்மை இவ்வாறிருக்க, இப்பத்திரிகைச் செய்தி எமது  அமைச்சினால்  மேற்கொள்ளப்பட்ட காணிவிடுவிப்பு சம்பந்தமான  முன்னேற்றகரமான  நடவடிக்கைகளை மழுங்கடிப்பு  செய்வதாக அமைகிறது.