நெதர்லாந்து கால்பந்தாட்ட  அணியின் தலைவரும் பெயர்ன் மூனிச் கால்பந்து கழகத்தின் சிரேஷ்ட வீரருமான ஆர்ஜன் ரொபென் சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.


எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளுக்கான தகுதிகாண் போட்டியின் தோல்வியின் பின்னரே அவர் தனது ஓய்வை கால்பந்து உலகிற்கு அறிவித்துள்ளார்.தனது சிறுபராயம் முதல் கால்பந்து விளையாட்டில் சிறந்த வீரராக திகழ்ந்த ஆர்ஜன் ரொபென், இரு கால்களாலும் முன்களத்தில் நின்று விளையாடும் திறமை படைத்தவர்.


கடந்த 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் போர்த்துக்கல் அணியுடன் இடம்பெற்ற நட்புறவுப் போட்டியோன்றின் போதே ரொபென் நெதர்லாந்து அணிக்காக முதன்முதலாக விளையாடினார். தனது 19 ஆம் வயதில் நெதர்லாந்து கால்பந்து அணியுடன் இணைந்த ரொபென், இதுவரை 96 போட்டிகளில் விளையாடி, அணிக்காக 37 கோல்களை பெற்றுக்கொடுத்துள்ளார்.இந்நிலையில் கடந்த புதன்கிழமை சுவீடன் அணியுடன்  இடம்பெற்ற போட்டியில் ரொபென், இரு கோல்களை பெற்ற போதும் தனது அணியால் 2018 ஆம் ஆண்டிற்கான உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளில் விளையாட முடியாது என உறுதியானவுடனே தனது ஓய்வை குறித்த போட்டியின் முடிவில் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.