பதுளையைச் சேர்ந்த ஏழு வயதுச் சிறுமி, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவைச் சந்திக்கும் தனது ஆசையை இன்று (13) பூர்த்தி செய்துகொண்டாள்.

எம்.என்.அமானி ரைதா என்ற இந்தச் சிறுமி, ஜனாதிபதியைச் சந்திக்க விரும்பி பதுளையில் இருந்து கொழும்பு வந்தாள். 

பாடசாலைச் சீருடையுடன் ஜனாதிபதியைச் சந்திக்கச் சென்ற அமானி, வெளியே காத்திருக்குமாறு கேட்கப்பட்டாள்.

சிறுமி வந்திருக்கும் விடயம் ஜனாதிபதிக்குத் தெரிவிக்கப்பட்டதும், தனது வேலைகளைச் சற்றே இடைநிறுத்திவிட்டு, அமானியையும் அவளது பெற்றோரையும் உள்ளே அழைத்து கைகூப்பி வரவேற்றார்.

ஜனாதிபதியிடம், தான் கைப்பட வரைந்த ஓவியத்தையும் அமானி கையளித்தாள்.

ஜனாதிபதிக்கும் அமானிக்கும் இடையில் நடந்த உரையாடல், அப்படியே கீழே:

ஜனாதிபதி: உங்களுக்கு அக்கா, தங்கை இருக்கிறார்களா?

அமானி: இல்லை. தம்பி மட்டும்தான்!

ஜனாதிபதி: அப்படியா? தம்பி எங்கே?

அமானி: தம்பி வீட்டில்

ஜனாதிபதி: ஏன் அவரை அழைத்துக்கொண்டு வரவில்லை? பாலர் பாடசாலை போகிறாரா?

அமானி: ஆமாம்

ஜனாதிபதி: தம்பியின் பெயர் என்ன?

அமானி: ஆர்த்திக்

ஜனாதிபதி: அப்படியா?

அமானி: நான் உங்களுக்கு ஒரு ஓவியம் வரைந்து தந்தேன்தானே? அது உங்களுக்குப் பிடித்திருந்தால், அதை இந்தச் சுவற்றில் மாட்டி வையுங்கள்.

ஜனாதிபதி: நிச்சயமாக அதைச் சுவற்றில் மாட்டுவேன்.

அமானி: யாரும் நம்பவில்லை, நான் உங்களைச் சந்திப்பேன் என்று!

ஜனாதிபதி: யாரும் நம்பவில்லையா? ஆனால் நீங்கள்தான் என்னைச் சந்தித்துவிட்டீர்களே?

அமானி: நானே நம்பவில்லை. இந்த வாய்ப்பைத் தந்ததற்கு நன்றி. மீண்டும் என்னை வரச் சொல்லுங்கள்.

ஜனாதிபதி: தாராளமாக வரலாம். எப்போது விரும்பினாலும் நீங்கள் என்னை வந்து சந்திக்கலாம். நீங்கள் வாருங்கள், என்னைச் சந்திக்க... சரியா? நானும் பதுளை வந்தால் உங்களை வந்து சந்திக்கிறேன்.

அமானி: பாடசாலைக்கு வரும்போது சொல்லுங்கள். எப்போது வருவீர்கள் என்று முன்கூட்டியே சொல்லுங்கள்...

இதையடுத்து அமானிக்கு நினைவுப் பரிசொன்றை வழங்கிய ஜனாதிபதி, தன்னை ஞாபகப்படுத்திக்கொள்ளும் வகையில் அதை அவளது வீட்டில் வைத்துக்கொள்ளுமாறு கூறினார்.

நெகிழ்ச்சியான இந்தக் காணொளி சிங்கள தனியார் தொலைக்காட்சியின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.