கேப்பாபுலவின் ஊடாக செல்லும் வற்றாப்பளை புதுக்குடியிருப்பு பிராதான வீதி புதிதாக அமைக்கப்பட்டு வேலைகள் அனைத்தும் முடிவுற்றபோதிலும் இன்னும் மக்கள் பாவனைக்கு பயன்படுத்த முடியாத நிலையில் இராணுவம் தடைசெய்து மாற்று பாதையை உருவாக்கி பயணிகளுக்கு இடையூறுகளை விளைப்பதாக குறித்த வீதியை பயன்படுத்தும் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

கேப்பாபுலவு கிராமத்தை ஊடறுத்து செல்லும் இந்த வீதி பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருந்த நிலையில், இந்த ஆண்டின் ஆரம்பத்தில் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு கடந்த ஜுலை  மாதம் பூரணமாக வேலைகள் முடிக்கப்பட்டு பாவிக்க கூடிய நிலையில் உள்ளபோதிலும் கேப்பாபுலவில் நிலைகொண்டுள்ள இராணுவம் வீதியை கேப்பாபுலவின் ஆரம்பத்தில் மறித்து பாரிய கதவினை அமைத்துள்ளதோடு மாற்று பாதை ஒன்றை காடு ஒன்றினை ஊடறுத்து அமைத்துள்ளது. மாற்றீடாக அமைக்கப்பட்ட பாதை தற்போது மழை காலம் ஆரம்பித்துள்ளதால் சேறும் சகதியும் நிறைந்து காணப்படுவதாகவும் பெண்கள் பாடசாலை செல்லும் சிறுவர்கள் பயணம் செய்வதற்கு பொருத்தமற்றதாக அடர்ந்த காட்டின் ஊடாக  அமைக்கப்பட்டுள்ளது.

இதனால் குறித்த மாற்று பாதையினை பயன்படுத்தும் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுக்கவேண்டிய நிலை ஏற்படுவதோடு  பெண்கள் மற்றும் பாடசாலை செல்லும் சிறுவர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழலும் இருப்பதாக குறித்த வீதியை பயன்படுத்துவோர் கவலை தெரிவித்துள்ளனர்.

பல மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள பிரதான வீதியை இராணுவம் மட்டுமே பயன்படுத்துவதாகவும் இராணுவத்துக்காக மட்டுமே குறித்த வீதி அமைக்கப்பட்டுள்ளதா.? என என்னை தோன்றுவதாகவும் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

எனவே உரியவர்கள் விரைவில் இந்த பிரதான வீதியை மக்களை பயன்படுத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என இந்த வீதியை பயன்படுத்தும் பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.