சோமாலிய என்றால் கடற்கொள்ளையர்கள் என்பது போல இலங்கையை வங்கி கொள்ளையர்கள் இருக்குமிடமாக முழு உலகமுமே வியந்து பார்க்கும் அளவிற்கு நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சி புகழ்பெற்றுள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவனச , ஜனாதிபதி ஆணைக்குழு முன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எப்போது அழைக்கப்படுவார எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

கூட்டு எதிர்கட்சியின் ஊடக சந்திப்பு நேற்று வியாழக்கிழமை பொரள்ளையில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் இடம்பெற்றது. 

இதன் போது உரையாற்றுகையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவனச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில் ,

அன்னத்திற்கு புள்ளடியிட்ட அனைத்து மக்களும் இன்று நல்லாட்சி அரசாங்கம் தொடர்பில் வெட்கித்துள்ளனர். தற்போதைய அரசாங்கத்தின் திருட்டுதனம் நாடு கடந்து பல சர்வதேச நாடுகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

இலங்கையில் மத்திய வங்கி கொள்ளையை அடுத்து தற்போது நல்லாட்சி அரசாங்கத்தின் உறுப்பினர்கள் தாய்வான் வங்கியிலும் தனது கைவரிசையை காட்டியுள்ளனர்.

சோமாலிய என்றால் கடல் கொள்ளையர்களுக்கு பெயர்போன இடமாகியுள்ளது. இலங்கை என்றால் வங்கி கொள்ளைகளுக்கு புகழ்பெற்று வருகின்றது. அந்தளவிற்கு நல்லாட்சி அரசாங்கம் நாட்டின் நற்பெயரை சர்வதேசத்தில் புகழ்பெற செய்துள்ளது. 

இந்நிலையில் இரண்டு பிரஜா உரிமைகளை வைத்துள்ளவர்கள் தேசிய அரசியலில் ஈடுப்பட முடியாது என புதிய சட்டங்களை உருவாக்கியுள்ளது. 

இந்த சட்டம் நடைமுறையில் இருக்குமாயின் அரச நிறுவனங்களின் தலைமை பதவிகளுக்கு எந்தளவு தொடர்புப்படும் என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். ஒரு பக்கம் அரசியலமைப்பின் ஊடாக நாட்டை துண்டாடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது. மறுப்புறம் எட்கா உள்ளிட்ட பல ஒப்பந்தங்கள் ஊடாக தேசிய சொத்துக்களை இந்தியாவிற்கு வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்களுக்கு வருபவர்களை நன்றாக அவதானியுங்கள். முன்னாள் நிதி அமைச்சர் , தற்போதைய அமைச்சர்களும் ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய பதவிகளில் உள்ளவர்களுமான மலிக் சமரவிக்ரம மற்றும் கபீர் ஹசீம் ஆகியோரும் நேற்று முன்தினம் அழைக்கப்பட்டனர்.

அந்த வரிசையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எப்போது ஜனாதிபதி ஆணைக்குழு முன் அழைக்கப்படுவார் என்பதை ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளோம். தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு துணைப்போவதற்கு உள்நோக்கங்கள் காணப்படுகின்றன. ஆனால் மக்கள் விடுதலை முன்னணி எவ்வாறு செல்லும் என்ற கேள்வியே தற்போதுள்ளது.

60 ஆயிரம் இளைஞர்கள் கொலை செய்யப்பட்டனர். அப்போது இந்த பேச்சுக்கள் எதுவும் இடம்பெறவில்லை. ஆனால் தற்போது ரோஹன விஜேவீரவின் கொள்கையை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் ரில்வின் சில்வா உட்பட மக்கள் விடுதலை முன்னணியினர் கருத்தக்களை தெரிவித்து வருகின்றனர். 

ஆகவே இன்றைய நிலைமையை கருத்தில் கொண்டு மக்கள் மிகவும் பொறுமையுடன் உள்ளனர். ஓரு கட்டத்தில் அவர்கள் பதில் கூறுவார்கள் என அவர் குறிப்பிட்டார்.