(லியோ நிரோஷ தர்ஷன்)

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் தீபாவளி பண்டிகை கொடுப்பனவை அரசாங்கம் இன்னும் வழங்கவில்லை . இதுவா ? நல்லாட்சி அரசாங்கத்தின் தமிழ் மக்கள் மீதான பற்று என பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கேள்வியெழுப்பியுள்ளார்.

ஹம்பாந்தோட்டை ஆர்ப்பாட்டத்தின் போது ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்து சர்வதேசத்தின் சாபத்திற்கு ஆழாகியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கூட்டு எதிர்க்கட்சியின் ஊடக சந்திப்பு இன்று வியாழக்கிழமை பொரெல்லையில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் இடம்பெற்றது. 

இதன் போது உரையாற்றுகையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில் ,

ஹம்பாந்தொட்டையில் இடம்பெற்ற அமைதியான ஜனநாயக போராட்டத்தின் மீது தாக்கதல் நடத்தியது மாத்திரமல்லாது ஊடகவியலாளர் ஒருவரும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

நாட்டில் ஜனநாயக நல்லாட்சியை ஏற்படுத்துவதாக கூறிய அரசாங்கம் இன்று ஊடக சுதந்திரத்திற்கு பாரிய சவாலாகியுள்ளது. சர்வதேச ஊடக அமைப்பு வெளிப்படையாகவே அரசாங்கத்தின் மீது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

மறுப்புறம் பொது மக்களின் பிரிதிநிதிகளாக கருதப்பட கூடிய பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்று சிறைவைக்கப்பட்டுள்ளனர். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் அரசாங்கம் பொறுப்பற்ற வகையில் செயற்படுமாயின் அதனை கண்டித்து போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியது மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் எமது கடமையாகும்.

அஹிம்சை முறையில் முன்னெடுக்கப்பட்ட ஹம்பாந்தோட்டை ஆர்ப்பாட்டத்தினை மையப்படுத்தி கைதுகள் இடம்பெற்றுள்ளது. இதுவரையில் சுமார் 34 பேர் வரையில் சிறைவைக்கப்பட்டுள்ளனர். இது மிகவும் மோசமான நிலைமையாகும். பெண்கள் பலரும் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.

வீதியில் சென்றவர்களை கூட பொலிசார் கைது செய்து சிறைவைத்துள்ளனர். 74 வயதுடைய வயோதிப பெண்ணை கூட சிறைவைத்துள்ளனர். ஆகவே அரசாங்கத்தின் ஜனநாயக விரோத அடக்குமுறைமையை கண்டித்து போராட அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து போராட வேண்டும். சிறுபான்மையின மக்களின் உரிமைகள் குறித்து பேசும் நல்லாட்சி அரசாங்கம் அரச ஊழியர்களுக்கான தீபாவளி பண்டிகைக்கான 10 ஆயிரம் ரூபாவை இன்னும் கொடுக்க வில்லை. இவ்வாறான நிலைமையிலேயே நல்லாட்சி அரசாங்கம் ஆட்சி செய்து வருகின்றது என குறிப்பிட்டார்.