(லியோ நிரோஷ தர்ஷன்)

ஒழுக்கமான எதிர்கட்சியாக இருந்து நாட்டிற்கு சேவை செய்வதை விடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தின் திட்டங்களை ஆதரிக்கும் சகபாடியாக செயற்படுவதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.

கூட்டு எதிர்கட்சியின் ஊடக சந்திப்பு இன்று வியாழக்கிழமை பொரெள்ளையில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் இடம்பெற்றது. 

இதன் போது உரையாற்றுகையிலேயே பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில் ,

உள்ளுராட்சிமன்ற தேர்தலை ஜனவரியில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கும் வகையிலான சமிக்ஞைகளை அரசாங்கம் வெளியிட்டு வருகின்றது . 

ஆனால் உறுதியாக தேர்தல் இடம்பெறுமா ? என்று கூற முடியாது. கடந்த இரண்டரை வருட காலமாக உள்ளுராட்சிமனறங்கள் அனைத்தும் செயலிழந்து போயுள்ளன.

எவ்வாறாயினும் தேர்தலில் கூட்டு எதிர் கட்சி ஒன்றிணைந்து ஒரு சின்னத்தின் கீழ் ஒன்றிணைந்து போட்டியிடும். இதற்காக இடம்பெற்ற பங்காளி கட்சிகளுடனான பேச்சுவார்த்தைகள் வெற்றிபெற்றுள்ளது. 

நாட்டில் எதிர்க்கட்சி ஒன்று உள்ளபோதிலும் அரசாங்கத்தின் சகபாடியாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்படுகின்றது. எனவே மாற்று எதிரக்கட்சிக்கான தேவை உணரப்பட்டு கூட்டு எதிர் கட்சி அந்த பணியை முன்னெடுத்து வருகின்றது.

தாய்வான் வங்கியில் இடம்பெற்ற வங்கி கொள்ளையில் இலங்கையர் தொடர்புப்பட்டுள்ளமை பெரும் அபகீர்த்தியை நாட்டிற்கு ஏற்படுத்தியுள்ளது. அதே போன்று ரஷ்யாவிடமிருந்து கப்பல் வாங்குவதற்காக மத்தள விமான நிலையத்தை இந்தியாவிற்கு விற்கின்றனர். 

இதே போன்று ஊழியர் சேமலாப நிதியத்தில் இருந்து பெருந்தொகையான பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மிகவும் மோசமான ஊழல்களை நல்லாட்சி அரசாங்கத்தின் உறுப்பினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். 

எமது தேர்தல் பிரசாரத்தின் தொனிப்பொருளாக நல்லாட்சி அரசாங்கத்தின் ஊழல்களே காணப்படும் . அதே போன்று அரசியலமைப்பு ஊடாக நாட்டை பிளவுப்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்கு எதிராக குரல் எழுப்பப்படும் போது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படுகின்றன.

தேசிய சொத்துக்களை அரசாங்கம் அந்நியநாடுகளுக்கு விற்பணை செய்து வருகின்றது. இதனால் சீனா மற்றும் இந்தியாவிற்கு இடையிலான போட்டி தன்மை இலங்கையில் அதிகரித்துள்ளது என குறிப்பிட்டார்.