ஐக்கிய நாடுகள் சபையின் இடைநிலை நீதி தொடர்பான விசேட பிரதிநிதி பப்லோ டி கிரீஃப் தலைமையிலான ஐக்கிய நாடுகள் சபை குழுவினர் இன்று காலை கிளிநொச்சி கந்தசாமி கோவில்  முன்றலில் இருநூற்று முப்பத்தைந்தாவது நாளாக காணமல் ஆக்கப்பட்ட  தமது உறவுகளுக்கு தீர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்தித்தனர்.

ஐக்கிய நாடுகள் சபை குழுவினரிடம்  நிலைமாறு காலநீதி சம்பந்தமாகவும் அதில் உள்ள குறைபாடுகள் சம்பந்தமாகவும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அலுவலகம் தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவுகள்  உறவுகளான  தம்முடன் கலந்தாலோசிக்காது எடுக்கப்பட்ட  முடிவு  என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்தனர்.

உறவுகளின் உள்ளக்குமுறல்களை பொறுமையாக செவிமடுத்த பப்லோ டி கிரீஃப் "நீங்கள் காணாமல் ஆக்கப்பட்ட உங்கள் உறவுகளுக்காக மேற்கொண்டு வரும் இப் போராட்டத்தை மதிகின்றேன், நீங்கள் கூறியவற்றை கருத்தில் கொண்டு நிச்சயமாக அரசுடன் பேசுவேன்" என தெரிவித்தார்.