முன்னறிவிப்பின்றி திடீரென ஆரம்பிக்கப்பட்ட வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ள ரயில்வே ஊழியர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர் அறிவித்துள்ளதாகத் தெரியவருகிறது.

மேற்படி வேலைநிறுத்தம் குறித்து கருத்து வெளியிட்டிருக்கும் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, முன்னறிவிப்பு எதுவுமின்றி திடீரென ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலை நிறுத்தம் சட்ட விரோதமானது என்று குறிப்பிட்டார்.

“ரயில்வே ஊழியர்களின் இந்த திடீர் நடவடிக்கைகளால், நேற்றிரவும், இன்று காலையும் நூற்றுக்கணக்கான மக்கள் நடுத்தெருவில் தள்ளப்பட்ட நிலைக்கு ஆளாகியுள்ளனர். முன்னறிவிப்பின்றி ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலை நிறுத்தம் கண்டிக்கத்தக்கது.

“ரயில்வே ஊழியர்கள் முன்வைத்திருக்கும் கோரிக்கைகளில் சில நடைமுறைச் சாத்தியம் அறவே அற்றது. அவற்றை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

“மக்களை கடும் அசௌகரியத்துக்கு உள்ளாக்கியுள்ள இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபரும் பொலிஸ் மா அதிபரும் பரிந்துரைத்துள்ளனர்.”

இவ்வாறு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

திடீரென நேற்று (11) மாலை ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலை நிறுத்தத்தால் பயணிகள் கடும் அதிருப்திக்கு ஆளானதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது. பயணிகள் ரயில் நிலைய அதிகாரிகளுடன் மோதலில் ஈடுபட முயற்சித்தனர். பொலிஸாரின் நடவடிக்கையால் நிலைமை சுமுகமாக்கப்பட்டது.