சாரதிகள் மற்றும் காப்பாளர்களின் வேலை நிறுத்தத்தால் புகையிரதச் சேவைகள் முடங்கிப் போயுள்ள நிலையில், பொதுமக்களின் நலனைக் கருத்திற்கொண்டு இலங்கை போக்குவரத்துச் சபையில் பணியாற்றும் சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் விடுமுறைகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

புதிய பயிலுனர் சாரதிகளை சேவையில் உள்ளீர்த்துக்கொண்ட செயற்பாட்டில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகக் கூறி, நேற்றிரவு திடீர் வேலை நிறுத்தத்தில் புகையிரதச் சாரதிகள் மற்றும் காப்பாளர்கள் இறங்கினர்.

மிகக் குறைவான ரயில்கள் மட்டுமே இயக்கப்படும் நிலையில், தமது கோரிக்கை நிறைவேற்றப்படும் வரையில் வேலை நிறுத்தம் தொடரும் என ரயில்வே ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.

இந்த நிலையில், இத்திடீர் வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் கடும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், மக்களின் வசதியைக் கருத்திற்கொண்டு போக்குவரத்துச் சபையில் பணியாற்றும் பேருந்துச் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் அனைவரினது விடுமுறைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

இதனால், வெகுவிரைவில் வழக்கத்திலும் அதிகமான பேருந்துகளைச் சேவையில் ஈடுபடுத்தவும் போக்குவரத்துச் சபை திட்டமிட்டுள்ளது.