அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் சாண்டா ரோசாவின் காடுகளில் எரியத் தொடங்கிய காட்டுத் தீ தற்போது நகரம் முழுக்க பரவியுள்ளது. இதனால் 17 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் இப் பகுதியில் அடிக்கடி காட்டுத் தீ ஏற்படுவது வழக்கமாகும். தற்போது இது மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் காட்டுத் தீ ஏற்படுவதற்கு பெயர் போனது, வருடத்தில் அதிக நாட்கள் இந்த மாகாணம் காட்டுத் தீயால் பாதிக்கப்படுகிறது, முக்கியமாக கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் சாண்டா ரோசா நகரத்தில் இது போன்ற காட்டுத் தீ ஏற்படுவது வழக்கம். ஒவ்வொரு முறை காட்டுத் தீ ஏற்படுவதற்கு முன்பும் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். ஆனால் இம் முறை அங்கு மிக மோசமான காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தொடர்ந்து 14 காட்டுத்தீக்கள் அந்த மாகாணத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  திடீர் என்று ஏற்பட்ட இந்தக் காட்டுத் தீ தற்போது கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பரவியுள்ளது. சாண்டா ரோசாவின் நகரத்திற்குள்ளும் தற்போது இந்தக் காட்டுத் தீ பரவி உள்ளது. இதனால் இரண்டே நாட்களில் நகரத்தில் 80 சதவிகிதத்திற்கும் அதிகமான பகுதிகள் அழிந்து போய் உள்ளன.

12 மணி நேரத்தில் 20,000 ஏக்கர் நிலத்தை மொத்தமாக அழித்துள்ள இந்தக் காட்டுத் தீ நகரத்தில் இருக்கும் பல வைத்தியசாலைகளை சூறையாடியுள்ளது. அதுமட்டும் இல்லாமல்  தற்போது மக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் சாண்டா ரோசா அரசு  வைத்தியசாலையையும் நெருங்கியுள்ளது.  குறித்த வைத்தியசாலையில் மிக அதிக அளவில் நோயாளிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவ் வைத்தியசாலையில் தீ பற்றினால் அது வெடிக்கும் அபாயம் உள்ளது என கருதப்படுகிறது.

இத் தீ விபத்தால் இது வரை 175,000 பேர் கலிபோர்னியாவை விட்டு வெளியேறி இருக்கின்றனர். அது மட்டும் இல்லாமல் 17பேர் தீயிற்கு இரையாகியுள்ளனர். மேலும் 1000 கணக்கானோர் வைத்தியசாலையில்  தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தெரியவருகிறது.