பாகிஸ்தானுக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் 68 ஓட்டங்களால் வெற்றிபெற்று தொடரை 2-0 என வெள்ளையடிப்புச் செய்த இலங்கை அணி ஐக்கிய அரபு இராச்சியத்தில்  சாதனையையும் படைத்துள்ளது.

பிங் நிறப்பதில் விளையாடிய முதலாவது பகலிரவு டெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணி  வெற்றிபெற்று தனது டெஸ்ட் அந்தஸ்தை நிருபித்தது.

இதுவேளை, டுபாயில் வைத்து பாகிஸ்தானை வெள்ளையடிப்புச் செய்து வெற்றிபெற்று இலங்கை அணி சாதனை படைத்துள்ளது.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அபுதாபியில் இடம்பெற்றது.

இந்நிலையில் அபுதாபியில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் 21 ஓட்டங்களால் வெற்றிபெற்று 1-0 என இலங்கை அணி முன்னிலை பெற்றிருந்தது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையில் இடம்பெற்ற 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 68 ஓட்டங்களால் வெற்றி பெற்று 2-0 என பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை வெள்ளையடிப்புச் செய்து சாதனை படைத்தது.

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியில்  5 ஆவதும் இறுதியுமான இன்றைய நாளில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற 5 விக்கெட்டுகள் மீதமிருக்க 119 ஓட்டங்கள் பெறவேண்டிய தேவை இருந்தது.

இலங்கை அணி, துல்லியமான பந்துவீச்சின் உதவியுடன் பாகிஸ்தான் அணிகளின் விக்கெட்டுகளை சாய்த்து 68 ஓட்டஙகளால் வெற்றிபெற்றது.

இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த்து.

அந்தவகையில் தனது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 482 ஓட்டங்களைப்பெற்றது.

இலங்கை அணி சார்பாக துடுப்பாட்டத்தில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய திமுத்து கருணாரத்ன 196 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்த வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பாக யஷீர் ஷா 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இந்நிலையில் தனது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 262 ஓட்டங்களைப் பெற்று 218 ஓட்டங்களால் பின்னிலை பெற்றது.

பாகிஸ்தான் அணி சார்பாக துடுப்பாட்டத்தில் அசார் அலி 59 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

இலங்கை அணி சார்பாக பந்துவீச்சில் டில்ருவான் பெரேரா மற்றும் ஹேரத் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதையடுத்து 218 ஓட்டங்களால் முன்னிலைபெற்ற இலங்கை அணி தனது 2 ஆவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடியது.

பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சுக்களை தாக்குப்பிடிக்கத் தடுமாறிய இலங்கை அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிய, இறுதியில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 96 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

பந்துவீச்சில் பாகிஸ்தான் அணிசார்பாக வகாப் ரியாஸ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதையடுத்து 317 ஓட்­டங்­கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி தனது 2 ஆவது இன்னிங்ஸில் துடுப்­பெ­டுத்­தா­டி­ய பாகிஸ்தான் அணி இன்றைய 5 ஆம் நாளில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 248 ஓட்டங்களைப்பெற்று 68 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

பாகிஸ்தான் அணி சார்பாக துடுப்பாட்டத்தில் அசாத் சௌபீக் 112 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக டில்ருவான் பெரேரா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பாகிஸ்தானுக்கெதிரான தொடரை 2-0 எனக் கைப்பற்றிய இலங்கை அணி டுபாயில் வைத்து பாகிஸ்தானை வெற்றிகொண்டு சாதனையை நிலைநாட்டியது.

இப் போட்டியின் ஆட்டநாயகனாகவும் தொடரின் ஆட்டநாயகனாகவும் இலங்கை அணியின் திமுத்து கருணாரத்ன தெரிவு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் சந்திமல் தலைமையிலான இலங்கை டெஸ்ட் அணி சொற்ப காலத்தில் மீள் எழுச்சிபெற்று இலங்கை அணி ரசிகர்களின் நம்பிக்கைக்கும் விசுவாசத்திற்கும் வலுச்சேர்த்துள்ளது.