சிறந்த நாட்டையும் சிறந்த தலைமுறையையும் கட்டியெழுப்புவதற்கு கிராமிய கலாசாரத்தை பலப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற பொலன்னறுவை லக்ஸ உயன கனிஷ்ட பாடசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடிக்கட்டிடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அன்று கிராமிய பாடசாலை மற்றும் விகாரையுடன் பிணைக்கப்பட்டிருந்த கிராமிய கலாசாரம் தேசிய ஐக்கியத்திற்கு அடிப்படையாக இருந்ததாக குறிப்பிட்ட ஜனாதிபதி, கிராமிய கலாசாரம் ஒழுக்கமும் நட்பண்புகளும் நிறைந்த பிரஜைகளை நாட்டுக்கு வழங்கியதாக குறிப்பிட்டார்.

தான் பிறந்து வளர்ந்த பிரதேசமான லக்ஸ உயன பிரதேசத்திற்கு இன்று முற்பகல் சென்ற ஜனாதிபதி, தான் ஆரம்ப கல்வியை பெற்ற லக்ஸ உயன கனிஷ்ட பாடசாலைக்கு மிகுந்த மகிழ்ச்சியுடன் சென்றார்.

1947 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட லக்ஸ உயன குடியேற்ற திட்டத்தில் ஆரம்ப குடியேற்றவாசிகளான காலஞ்சென்ற பெற்றோர்களை நினைவுகூர்ந்தும், உயிர் வாழ்கின்ற அனைவருக்கும் நோயற்ற ஆரோக்கியமான வாழ்க்கையை வேண்டியும் பாடசலையில் இடம்பெற்ற அன்னதான நிகழ்விலும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.

நினைவுப் பலகையை திறந்து வைத்து புதிய மாடிக் கட்டிடத்தை மாணவர்களிடம் கையளித்த ஜனாதிபதி, அதனை பார்வையிட்டார்.

லக்ஸ உயன கனிஷ்ட பாடசாலையில் அகில இலங்கை ரீதியாக வெற்றிகளை பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கு விருதுகளையும் சான்றிதழ்களையும் ஜனாதிபதி வழங்கி வைத்தார்.

லக்ஸ உயன ஆரம்ப பாடசாலை மாணவர்களும் லக்ஸ உயன கிராமவாசிகளும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு ஒரு நினைவு சின்னத்தை வழங்கி வைத்தனர்.

வட மத்திய முன்னாள் முதலமைச்சர் பேசல ஜயரத்ன மற்றும் லக்ஸ உயன பிரதேசவாசிகள் பெருமளவில் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.