இன்றைய திகதியில் ஆண்களாகயிருந்தாலும் அல்லது பெண்களாகயிருந்தாலும் வருவாய் ஈட்டுவதில் தான் அதிகளவிலான கவனத்துடன் இருக்கிறார்கள். இதனால் தங்களின் தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களேத் தவிர தங்களின் ஆரோக்கியம் குறித்து கவலைப்படுவதில்லை. யாராவது உங்களுடன் பேசும் போது அவர்கள் வாயையும், மூக்கையும் மூடிக் கொண்டால் தான் தங்களுடைய வாய் துர்நாற்றம் வீசுகிறது என்று தெரிந்துகொள்கிறார்கள். அதே போல் தங்களுடைய வாயில் புண் ஏற்பட்டிருந்தால் அதை அலட்சியப்படுத்திவிட்டு தொடர்ந்து தங்களின் பணிகளில் கவனம் செலுத்துகிறார்கள். இது குறித்து கேட்டால்,‘ அவை வரும். போகும் ’ என்று தத்துவார்த்தமாக பதிலளிப்பர். ஆனால் வாய் புண் ஏற்பட்டால் அதனை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக கவனிக்கவேண்டும். அதையும் கடந்து கவனிக்கவில்லை என்றால் அவை புற்றுநோயாக மாறக்கூடிய அபாயம் என்று எச்சரிக்கிறார் டொக்டர் மணிமாறன். 

அத்துடன் தொடர்ந்து வாய் புண்ணைப் பற்றி அவர் பேசும் போது, ‘ ஊட்டச்சத்து குறைபாடு, பல் கூச்சம், மது மற்றும் புகை பிடித்தல், கிருமித் தொற்று மற்றும் மன அழுத்தம் போன்ற காரணங்களால் ஒருவருக்கு வாய் புண் ஏற்படலாம். ஒரு சிலருக்கு அவர்களின் பற்களின் அமைப்பாலும் வாய் புண் தோன்றக்கூடும். அதாவது அவர்களின் பற்கள் கூர்மையாக இருந்து, அவை சரியான காலகட்டத்தில் சீராக்கப்படாமல் இருந்தால், அதன் காரணமாகவும் வாய் புண் ஏற்படக்கூடும். இதை விட அரிதாக ஒரு சிலர் உணவை வாயின் ஒரு பகுதியில் மட்டுமே வைத்து, அப்பகுதியிலுள்ள பற்களால் மட்டுமே நொறுக்கி சாப்பிடுவர். இதன் காரணமாகவும் அவருக்கு வாய் புண் ஏற்படக்கூடும்.

முதலில் உதட்டின் உள்பகுதி, வாயின் உள்பகுதி, நாக்கு, அண்ணம் ஆகிய பகுதிகளில் தான் உருவாகும். ஒரு சிலருக்கு ஒரு நேரத்தில் ஒரேயொரு புண்ணாக தோன்றும். ஒரு சிலருக்கு ஒரே தருணத்தில் இரண்டு அல்லது மூன்று புண்களாக தோன்றும். இது எந்த வயதினரையும், எந்த பாலினத்தினரையும் தாக்கக்கூடும். ஒரு சிலருக்கு அவர்களின் வயிற்றில் புண் இருந்தால் அதன் வெளிப்பாடாக கூட வாயில் புண் உண்டாகும். ஒரு சிலருக்கு கடுமையான வயிற்று வலி, குடல் அழற்சி, மலம் கழிக்கும் போது குருதி வெளியாதல் போன்ற அறிகுறிகளுடன் இருக்கும் போது வாயில் புண் உண்டாகும். இதனை முன்னெச்சரிக்கை அறிகுறியாக கருதி உடனடியாக முறையான சிகிச்சையை எடுத்துக் கொள்ளவேண்டும்.

பெரும்பாலும் சிகிச்சை எடுத்துக் கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் மூன்று நாட்கள்  முதல் ஒரு வாரத்திற்குள் மறைந்துவிடும். ஆனால் முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால் அவை மீண்டும் வருவதற்கான வாய்ப்பு உண்டு. அத்துடன் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவு முறையை உறுதியாக பின்பற்றினால் அவை மீண்டும் வராது.  ஒரு சிலருக்கு அவர்களின் பாதிப்பைப் பொறுத்து மருத்துவர்கள் ஆன்ட்டிபயாடீக் மருந்துகளை சாப்பிடும் படி பரிந்துரைப்பார். அதனை ஏற்று அந்த மாத்திரைகளை சாப்பிடவேண்டும். ஒரு சிலருக்கு இதன் காரணமாக வலியோ அல்லது அசௌகரியமோ இருந்தாலும், இதன் பாதிப்பின் வீரியம் தெரியாத அளவிற்கான ஹீலிங் ஜெல்லைத் தருவார்கள். இதனை பயன்படுத்தி வாயைக் கொப்புளித்தால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும். ஆனால் இதனை எப்போது, எத்தனை முறை, எப்படி பயன்படுத்தவேண்டும் என்பதை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். அதனை உறுதியாக கடைபிடிக்கவேண்டும். அத்துடன் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் விற்றமின் சத்துக்கள் அடங்கிய மாத்திரைகளையும் சாப்பிட சொல்வார்கள். அதனையும் ஏற்கவேண்டும்.

வாயை சுத்தமாக வைத்திருப்பது இதற்கான தற்காப்பு நடவடிக்கை. தினமும் இரவில் உறங்கச் செல்லும் முன் வாயையும், பற்களையும் சுத்தம் செய்துவிடவேண்டும். ஒரு சிலர் தங்களுடைய வாயில் பொருத்திக் கொள்ளும் செயற்கை பற்களாலும் இத்தகைய வாய் புண் ஏற்படலாம். அவர்கள் தங்களது செயற்கை பற்களை மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் மாற்றியமைத்துக் கொள்ளவேண்டும். அதே போல் வாய் புண்ணால் பாதிக்கப்பட்டிருக்கும் எக்காரணம் கொண்டும் காரம் அதிகமான உணவை சாப்பிடக்கூடாது. சற்று சூடான பானங்களையும் தவிர்க்கலாம். உடலுக்கு குளிர்ச்சி அளிக்கக்கூடிய உணவுப் பொருட்களை சாப்பிடலாம்.’ என்றார்.

டொக்டர் மணிமாறன்

தொகுப்பு: அனுஷா